பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"நாயன் நீரே நான் உமக்கிங்கடியேனாகில் நீர் எனக்குத்
தாயின் நல்லதோழருமாம் தம்பிரானா ரேயாகில்
ஆய அறிவும் இழந்தழிவேன் அயர்வுநோக்கி அவ்வளவும்
 போய் இவ்விரவே பரவையுறு புலவி தீர்த்துத் தாரும் என"

என்னும் சுந்தரர் வரலாற்றுப் பெரியபுராணப் பாடலால் நாயனார் என்ற சொல்லின் பொருள் இனிது விளங்கும். இதற்கு மேலும் ஒரு விளக்கம் காண்போம்:

தம்பிரான்:

தம்பிரான் என்ற சொல் சிவபிரானைக் குறிக்கும். தம் என்ற சொல் ஆன்மாவைக் குறிக்கும். பிரான் என்ற சொல் ஆன்மாக்களின் தலைவனாகிய சிவபிரானைக் குறிக்கின்றது. இதுவும் காரணப்பெயர். பிரியமானவன் பிரான் என்றாயிற்று. தலைவனாவான் உயிர்களிடத்துப் பிரியமாயிருப்பவனே யாவான். இவ்வினிய பெயரை ஆதீனங்களில் உள்ள அடியவர்கட்குப் பெயராக அமைத்துள்ளனர். பெருமானுக் குரிய பெயரை உபசாரமாக அடியவர்கட்கு அமைத்து வழங்கி வருகின்றனர். இதுபோல்தான் நாயனார் என்ற சிவபிரானின் திருப்பெயரும் அவனது அடியவர்களாகிய அறுபத்து மூவருக்கும் வழங்கி வருகின்றது. .

முத்திற வழிபாடு:

நாயன்மார் அறுபத்து மூவருள், குரு வழிபாடு செய்து அருள் பெற்றோர், பன்னிருவர். இலிங்க வழிபாடு செய்து அருள்பெற்றோர் முப்பத்திருவர். சங்கம் வழிபாட்டால் அருள் பெற்றோர் பத்தொன்பதின்மர் என்று மூன்று வகையாக அறுபத்துமூவரையும் பெரியபுராணத்தில் தெளிவுபடுத்தப் பெற்றுள்ளது.

குறிக்கோள் இந்நாயன்மார்கள் மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வழிகாட்டியவர்கள். பெரியபுராணம் மக்கட்கு அறிவிப்பதில் முக்கியமான செய்தி,