பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்கள் ஒவ்வொருவரும் குறிக்கோளுடன் வாழவேண்டும் என்பதே. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, கொழு கொம்பில்லாத கொடியின் வாழ்வைப்போன்றதாகும். இதனை அப்பர் அடிகள், -

    'பாலனாய்க் கழிந்தநாளும் பனிமலர்க்கோதைமார்தம்
    மேலனாக் கழிந்தநாளும் மெலிவொடு முப்புவந்து
    கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்
    சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டிச் சரத்துளானே'

என்னும் பாடலால் தெளிய விளக்கியுள்ளார். குறிக்கோள் என்பது இளமையிலேயே பின்பற்றவேண்டியது என்பதும் இப்பாடலால் நாம் நன்கு உணர்கிறோம். குறிக்கோளை உயிர் மூச்சாகக்கொண்டு நடையிடுகிறது பெரியபுராணம்.

முப்பெரும் புராணங்கள்:

தமிழகத்தில் பெரிதும் வழக்கத்தில் இருந்து வரும் புராணங்கள் மூன்று, அவை பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் என்பன. இவற்றுள் பெரியபுராணம், இறைவனை அரிதில் அடைந்த அடியவர்களின் வரலாறு பற்றியும், குறிக்கோளால் அவ்வருமைப்பேற்றைச் சாதித்த வன்மைபற்றியும் வளமுறக்காட்டுவது. திருவிளையாடற்புராணம், இறைவனை எளிமையில் எய்தலாம் என்பதையும், அதற்குப் பக்திமையே பயன்தரும் பாதை என்பதையும் பண்புடன் பகர்கிறது. கந்தபுராணம் நன்றிகொன்றவர்கள் இறைவனை அடைவது கடுமையானது என்பதைக் கழறுவது. இம்முப்புராணங்களுள், பெரியபுராணம் சூரியகுலத்தோன்றல்களாகிய சோழர்களை நெறிப்படுத்தத் தோன்றியது. சூரிய வெப்பம் தாங்கற்கரியது. ஆயினும் சாதனைக்குரியதே. திருவிளையாடற்புராணம், சந்திரகுலப்பாண்டியர்களை எளிமையில் நெறிப்படுத்திய வரலாறுகளைத் தெளிவுபடுத்துவது. கந்தபுராணமோ சிவபரம்பொருளின் அக்கினிக் கண்ணில் தோன்றியருளிய முருகப்பெருமானின் கருமையான போர்முறையால்