பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமுறைத் திருநாளில் தலைமை உரை

151



தொகுப்புரை

இன்று உங்கள் நினைவிற்கு கொண்டு வந்த கருத்துக்களைத் தொகுத்துக் கூறி அமைய விரும்புகின்றோம். தமிழகத்தின் தனி நெறி பெருநெறி திருநெறி சைவ சித்தாந்தத் திருநெறியேயாம். அது முடிந்த முடிபாகக் கருத்துலகக்குக் காட்சி அளிக்கின்றது. ஏனைய சமயங்களும் மக்கள் நலம் கருதுகின்ற இயக்கங்களும், மக்களை மக்களாகவே கருதி அன்பு செய் என்று சொல்ல, சைவம், மக்களை-மனநலம் சிறந்த மக்களை-அருளறம் பூண்ட பெருமக்களைக் கடவுளாகவே எண்ணி அன்பு செய் என்று சொல்கிறது. ஆண்டவன் அருளற நெறிவழி நிற்பவர்கள் அரனோடொப்பர். அப்பெருமக்களைச் சாருவதனால்-வழிபடுவ தனால் பல்வளமுற்று அழிவிலின்பத்தையும் பெற்று வாழ முடியும் என்பது சைவத்தின் கொள்கை. தேவாரத் திருமுறைகளை உள்ளன்புடன் ஓதி அனுபவிப்பவர்கள் ஒதக் கேட்பவர்கள் இம்மை மறுமை இன்பங்களைப் பெற்று இனிது வாழ்வார்கள் என்பன போலச் சில செய்திகளைச் சிந்தித்தோம்.

முடிப்புரை

மெய்யன்புடையீர், தமிழகத்தின் தனிச் சொத்து தெய்வத் திருமுறைகள். திருமுறைகள் உணர்த்தும் அருள றத்தை மக்களிடையே பரப்புதல் பெரும் பணியாகும் -இன்றைய சூழ்நிலைக்குத் தேவையான தொரு பணியுமாகும். சைவத் தமிழன்பர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பணியைச் செய்யக் கடமைப்பட்டுள்ளார்கள். கடமையை உணர்ந்து பணியில் இறங்குவோமாக அத்தகையதொரு பணியை அகனமர்ந்த அருளுணர்வுடன் இயன்ற போதெல்லாம் செய்துவரும் அருட்குருமூர்த்திகளின் அடி இணைகளுக்கு உள்ளந் தோய்ந்த-நன்றி கலந்த வணக்கத்தை உரிய தாக்குகின்றோம்.

              வளர்க சைவம்!
              மல்குக திருமுறை வளம்!!