பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காலம்-போர்களம் முதலியனவற்றைத் தொகுத்துக் கூறும் வரலாறல்ல தமிழகத்தின் கருத்து, உணர்வு, சமுதாயம் வளர்ந்து வாழ்ந்த இயல்பு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்குரிய காப்பியமாகப் பெரிய புராணம் திகழ்கிறது.

நூல் தோன்றிய களம்

தமிழ், காலத்தால் மூத்தமொழி, கருத்தாலும் மூத்து வளர்ந்த மொழி; தமிழ், இலக்கிய வளம்பெற்ற இனிய மொழி: இலக்கணத் திட்டம் வாய்ந்த மொழி, தமிழர்கள் வாழ்வியலிலும், தத்துவ இயலிலும், சமய வியலிலும் துறைபோகி வளர்ந்தவர்கள்; தனித்தன்மையுடைய தமிழர் நாகரிகம் பெருமிதமுடையது. அந்த நாகரிகம், யாதொரு குறிக்கோளும் பற்றுக்கோடு மில்லாத நாடோடிகளால் ஊடுருவப் பெற்று உரு மாற்றங்கள் அடைந்ததுண்டு. ஆயினும், பழமையின் பொலிவும் புதுமையின் துடிப்பும் இன்றும் தமிழ் நாகரிகத்திற்கு இருக்கவே செய்கிறது. அஃது என்றும் இருக்கும். உலகெலாம் என்று காப்பியத்தைத் தொடங்கிச் செய்த சேக்கிழார், உலகைத் தழுவ நினைத்தார். அஃதியற்கை அதுதான்் நாகரிகமுமாகும். ஆனாலும் தனித்தன்மையை இழக்கவோ, நாகரிகக் கலப்படக் கொடுமைக்கு ஆளாகவோ சேக்கிழார் விரும்பவில்லை. சேக்கிழார் தமிழ் நெஞ்சினர்; தமிழ் இன்பத்தில் துய்த்துக் களித்து அக்களிப்பைப் காப்பியத்தில் பொழிந்துள்ளார். சேக்கிழார், பாண்டிய நாட்டில் வீசும் தென்றல் தென்தமிழை நினைவூட்டுவதாக மூர்த்தி நாயனார் வரலாற்றில் பாடுகின்றார். தென்றல் உடல் வெப்பத்தைத் தணிக்கும்; தென்தமிழ் உயிர் வெப்பத்தைத் தணிக்கும்; அதனால் தமிழையும் தென்றலையும் ஒரு சேர எண்ணினார்.

"மொய்வைத்த வண்டின் செறிசூழல் முரன்ற சந்தின்
மைவைத்த சோலை மலயந்தர வந்த மந்த