பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

159


துன்பத்தையும் விளைவிக்கிறது; பயனுடையதாகவும் அமைவதில்லை. அது போல அகநிலை நிகழ்வுகளின் உணர்வு வழியது வாழ்வியல், மனிதகுலம், ஒருவர் குடும்பம் சமுதாயம் என்று தழுவி வளர்வதற்கு அகநிலை உணர்வு நிகழ்வுகளே காரணம். நிலத்தின் அடிப்பகுதி சுண்ணாம்பாக இருந்தால், ஊற்றெடுக்கும் தண்ணிரும் சுண்ணாம்பாகவே இருக்கும். நிலம் சீராக உழப்பெற்றுச் செப்பம் பெறாவிடில் தாவரங்கள் இனிது வளர்ந்து பயன் தரா. பால் பொழிந்து பாரினைப் பாதுகாக்கும் பசுவின் உடல் நலமாக இருந்தாலன்றிப் பாலும் நலம் தருவதாக அமையாது; அது போலப் பொறிகளைத் தாக்கி, பாதிப்பைத் தரும் காரியங்கள் தற்செயலாக நிகழ்வன அல்ல. திடீரெனவும் தோன்றுவன அல்ல. பல ஆண்டுகளாக நிகழ்ந்த அகநிலைகளின் விளைவேயாம். அகநிகழ்வுக்குக் களம் புலன்கள். புலன்களை இயக்குவது புத்தி, புத்தியின் செயற்பாடு அறிவு; அறிவு அன்புடன் கலக்குமானால் காரியங்கள் இன்பம் தருவனவாகவே அமையும். இருவேறு பொருள்கள் முரண்படலாம். ஆனால், உயிரின் அகநிலையும் புறநிலையும் அதாவது காரணமும் காரியமும் மாறுபடவே படா. அன்பு-சொல்வதற்கு எளிதாக இருக்கிறது. ஆனால் அன்புடையராதல் அரிது. 'அன்பே சிவம் என்பதை உணர வேண்டும். அன்பு, தவத்திலும் சிறந்தது. அதனினும் உயர்ந்த சீலம் உலகத்தின் இல்லை. இறைவன் திருவருளைப் பெறுதற்குரிய பொருளும் அன்பேதான்். "அன்பலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே" என்பது அப்பரடிகள் திருவாக்கு.

தன்னல நயப்பின் காரணமாகத் தோன்றும் உணர்ச்சி-நிர்ப்பந்தங்கள் காரணமாகத் தோன்றும் உணர்ச்சி அன்பு போலத் தோற்றமளிக்கும்-நடிக்கும்; ஆனால் அஃது அன்பன்று உடல் தன்னலமே நாடும்; உயிர் பிறர் நலமே நாடும்; அன்பு பிறர் நலமே நாடும்; தன்னல மறுப்பே அன்பின் அடையாளம். அன்பு கனன்று எரியும் நெருப்பைப்