பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

163


தலைகாட்டாது. அதுபோல ஈரநெஞ்சு இல்லாத வாழ்க்கை தளிர்த்தல் அரிது. நாம் ஒருவரோடொருவர் கூடிப் பழகுவதே கூட அகநிலையாக்கமாகிய பயன் பெறுவதற்குத்தான்!

திருவீழிமிழலையில் முருகநாயனார் திருமடத்தில் திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், அப்பரடிகள் ஆகிய அடியார்கள் தங்கியிருந்தார்கள். எவ்வளவு அருமையான காட்சி! இங்குக் கூடிய அடியார்களில் யாரும் 'சந்தியாசிக'ளல்லர்; ஆயினும் துறந்தோரில் தூய்மையுடையவராக விளங்கியவர்கள். இன்று நமது 'சந்நியாசி'களை அப்படி ஒருங்கிணைத்துப் பார்க்க முடிகிறதோ? திருமடங்களின் தலைவர்கள் நிலை என்ன? ஒரோவழி இணைத்துப் பார்த்தாலும், அது செயற்கையாகவே அமைந்து விடுகிறது. இயற்கையாக அமையவில்லை என்பதை இந்த நூற்றாண்டு உறுதிப்படுத்தியுள்ளது. அகம் நெகிழ் அன்பும் உறவும் வளர வேண்டுமானால் தனித்திருக்கும் பொழுதும் பலரோடு கூடியிருக்கும் பொழுதும் உயர் குணங்களையும், உயர் அன்பையும் நினைத்தல் வேண்டும்; பேச வேண்டும். பழகுவோரின் நற்பண்புகளை எண்ணிப் பார்ப்பதின் மூலம்தான் மேலும் மேலும் அன்பு வளரும்.

"ஒன்று நன்று உள்ளல்” என்பார் திருவள்ளுவர். அன்பு வளர்வதன் மூலம்தான் குறைகள் நீங்கும்; அன்பு நெறியே குறைகள் நீக்கத்திற்குரிய வழி. "மறத்திற்கும் அஃதே துணை" என்ற தமிழ் மறை உணர்க. இந்த அடியார்கள் முருக நாயனார் திருமடத்தில் கூடியிருந்தபொழுது என்ன பேசினார்கள்? திருத்தொண்டர் பெருமையினைப் பேசினார்கள். அப்பெருமையினைப் பலவாறாக விரிந்துரைத்தார்கள், விரிவுரைகள் மாறுபட்டிருக்கக்கூடும்; ஆனால் முரண்பாடுகளாக அல்ல; குறிக்கோள் ஒன்றாக இருக்கும் இடத்தில் முரண்பாடுகள் தோன்றா. இம்மாறுபாடுகள், அன்பின் வளர்ச்சியில்-விகிதத்தில் ஏற்பட்ட மாறுபாடுகளே!