பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

165


பெறுவதற்குமாகவே அவர்கள் இறைவனை வாழ்த்து இன்றனர். தக்கன் வேள்வி நிகழ்வு இதற்குச் சான்று.

"வாழ்த்துவதும் வானவர்கள்
தாம்வாழ்வான்; மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து
தம்மையெல்லாம் தொழவேண்டி"


என்று மாணிக்கவாசகர் வானவர்தம் நிலையை எடுத்துக் காட்டுவார். "நாட்டுத் தேவர்களும்” அதே இயல்பினர்; அதனாலன்றோ பெருமான் வான்பழித்திடுகின்றான். மண்ணில் புகுந்து மனிதருடன் விளையாடி ஆட்கொள்கிறான். தூய அன்பில் குளித்து மகிழும் வாய்ப்பு இறைவனுக்குக் கிடைப்பதில்லை. அன்றே அந்த நிலை! இன்று அதைவிட மோசம்! இன்று வழிபாடு நூற்றுக்கு நூறு வணிகமாகி விட்டது. அதனால்தான் பழங்காலத்தில் "வானத்தில் இறைவனைக் காணமுடியாது-ஆனால் மண்ணில் பார்க்கலாம்” என்ற நம்பிக்கை இருந்தது; இன்று அந்த நம்பிக்கையும் பசுமையாக இல்லை. அடியார்களுடைய அன்பில் நனைந்து ஆடுவதற்காக இறைவன் மண்மீது வருகின்றான்.

அமர்நீதி நாயனார் வரலாற்றில்

தொண்டர் அன்பெனும் தூயநீர் ஆடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக்கள்வர்”


என்று பெருமான் கோவணக் கள்வராக அருளாடல் செய்ததைக் குறிப்பிடுகின்றார்.

வழிபாட்டில் விதிமுறைகள் இருக்கலாம். ஆனால் அன்பினைத் தடைசெய்யும் முள்வேலிகளாக விதிகள் அமையக்கூடாது. வழிபாட்டுக்கு அன்பே உயிர் என்பதைக்