பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

173


பணியை மேற்கொண்டார் என்று கருதலாம். உழவாரப் பணிசெய்து திருக்கோயிலைக் காப்பாற்ற எண்ணிய அப்பரடிகள் மக்களைத் திரட்டினார். "நாமார்க்கும் குடியல்லோம்” என்று எடுத்தோதி-அடிமைத் தனத்தை அச்சத்தை நீக்கினார்.

வழிவழியாக வளர்ந்துவரும் செழுமைமிக்க அன்பு உழுவலன்பு எனப்பெறும். தமிழினம் வழிவழியாகச் சிவத்தினிடம் காட்டி வரும் அன்பு உழுவலன்பு, சிவம் உறையும் திருக்கோயில் பணி சிவநெறியைப் பேணும் அன்பில் தோன்றிய பணியாதலால் "உழவாரம்" என்று பெயர் பெற்றது போலும். மனத்தால், வாக்கால் செய்யும் தொண்டு உயர்ந்ததே ஆனாலும் அதைவிட உயர்ந்தது கைகளால் செய்யும் தொண்டு. கைகளால் செய்யும் தொண்டுக்கு உழைப்பு மிகுதியும் தேவை. உடலால் உழைப்பவர்கள் உயர்ந்தவர்களல்லர் என்ற கருத்து பொய்யானது; தவறானது. அது மட்டுமன்று. மனத்தினால் -வாக்கினால் செய்யும் தொண்டின் தகுதியை உறுதிப்படுத்துவது கையினாற் செய்யும் தொண்டேதான்். மேலும் மனத்தினால் வாக்கினால் செய்யும் தொண்டிற்கும் தொண்டிற்குக் காரணமான உணர்விற்கும் பாதுகாப்பளிப்பது "கைத் திருத்தொண்டே"யாம். மனத்தினால் வாக்கினால் செய்யும் தொண்டைவிடக் கைத்திருத்தொண்ட உயர்ந்தது என்பதைச் சிவம், திருவிழிமிழலையில் வாசியில்லாக் காசு தந்ததன் மூலம் உணர்த்திற்று. ஆயினும் அப்பரடிகள் அடிச்சுவட்டையொட்டி அந்தக் கைத் திருத்தொண்டு வளரவில்லை. இன்றளவும் வளரவில்லை. வளராதது மட்டுமின்றித் திருக்கோயில்களில் இன்று கைத்திருத்தொண்டு செய்வோர் நாலாந்தர ஊழியர்களாக நடத்தப்படுகின்றனர். அவர்கள் பெறும் ஊதியமும் குறைவு; மரியாதையும் குறைவு.