பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வர்கள்; குறிக்கோளை அடைவதற்காகத் தம்மையே அர்ப்பணித்தவர்கள். இறைவனுக்குத் தாயனைய பரிவுடை யராகி அமுதருத்தும் இயல்பினர் அரிவாட்டாயர். அவருடைய பணிக்கு ஒரு தற்செயலான இடையூறு தோன்றியது. இறைவனுக்கு அமுதை எடுத்துச்செல்லும் பொழுது தடுக்கி விழுந்து விட்டது. அமுதுக்குக் கொண்டு போன மாவடு முதலிய பொருள்கள் வயல் வெடிப்புகளில் வீழ்ந்துவிட்டன. அரிவாட்டாயர் இறைவனுக்கு அமுதருத் துதல் தடைப்பட்டதே என்று தன்னையே மாய்த்துக் கொள்ள முனைகிறார். உடன் பெருமானுடைய திருக்கரம் அரிவாட்டாய நாயனாரின் அர்ப்பணிப்பைத் தடுக்கின்றது; உடனிகழ்வாக, வயல் வெடிப்புக்குள் 'கடுக்'கென்று மாவடுவைக் கடித்துண்ணும் ஒலியும் கேட்கிறது. இன்று இறைவனுக்கு அமுது அருத்தியே தீர வேண்டும் என்னும் அன்புடையார் யார்? குறிக்கோளுடையார் யார்? இன்று திருக்கோயில்களில் திருவமுது அருத்துதல் என்பது ஒரு போலிச் சடங்காகப் போய்விட்டது. இறைவன் அமுதருந்த வில்லையே என்று எண்ணிக் கவலைப்படுவாரில்லை. ஏன்? அத்தகைய குறிக்கோளுடையவரும் இல்லை. எல்லாம் தொழில் மயம்; பிழைப்புக்கு வழி. ஆதலால் இன்று உயிர்ப்பில்லை. அடுத்து, கண்ணப்பநாயனார் இறைவனி டத்தில் அன்பு காட்டுதல். அவர் சாத்திர சம்பிரதாயச் சடங்குகளைக் கடந்து ஊனும் உயிரும் நின்றுருக அன்புரு வானார். இறைவனுடைய திருமேனிக் கண்ணிலிருந்து செங்குருதி பாய்கிறது. அன்பின் குறிக்கோளாகவுள்ள உயிரின் உயிர்நிலையாகிய திருமேனியின் கண்ணில் செங்குருதியைக் கண்டவுடன் கண்ணப்பர் துடிக்கிறார். ஆனால் பலநாள் பழகிய சிவகோசரியாருக்கு அந்தத் துடிப்பில்லை, ஏன்? அதுதான் அன்புக்கும் தொண்டுக்கும் - பிழைப்புக்கும் உள்ள வேறுபாடு.