பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காரணமாகவும் தோன்றும் வேறுபாடுகள் வேறு. அத்தகு வேறுபாடுகள் அன்பையும் அனுதாபத்தையும் தோற்று விக்கும். இணக்கமுறச் செய்து வளர்க்கும். பிரிவினை என்பது பிரித்து வைப்பது. செல்வத்தை, அதிகாரத்தை, தமக்கே உரிமையாக்கிக் கொள்ளத் தந்திரங்கள் செய்து கண்ணுக்குப் புலனாகாத காரணங்ளைக் காட்டிப் பிரித்து வைப்பது. இத்தகு பிரிவினைகள் அறிவியல் முறைக்கு ஒவ்வாதன. இந்தப் பிரிவினைகளின் காரணமாகத்தான்் தீண்டாமை, இன ஒதுக்கல் முதலிய சமுதாயக் கேடுகள் தோன்றின. பிரிவினைகளில் தீயது என்று நாம் குறிப்பிடுவது பிறப்பின் காரணமாகக் கற்பிக்கப்படுகின்ற சாதி, குல வேற்றுமைகளைத்தாம். சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சாதிகள் இல்லாமல் இல்லை. குலங்கள் கூறப்பெறாமல் இல்லை. எந்தவோர் அடியாரைக் குறிப்பிடும் பொழுதும் சேக்கிழார் சாதி, குலம் ஆகியன கூறியே குறிப்பிடுகின்றார். ஏன்? திருநாட்டுச் சிறப்பில் "சாதிகள் நெறியில் தப்பா" என்று சேக்கிழார் தெளிவாகவே கூறுகிறார். பெரியபுராணம், அவர் காலத்திலும் அவர் காலத்திற்கு முன்பும் சாதிகள் இருந்தன என்பதை நமக்குத் தெரிவிக்கிறது. ஆனால் சாதி வேற்றுமைகள் இன்றிருக்கும் அளவுக்கு இறுக்கமாக இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.

பல்வேறு சாதிப் பிரிவினரிடையே கலந்து பழகுதல் தகாதெனும் கருத்து அன்று இல்லை. மகள் கொடுத்தல், மகள் கொள்ளுதல், உடனுறைதல், உடனுண்ணுதல் போன்ற நிகழ்வுகள் இருந்தன. ஏன்? ஞானாசிரியன்மாராக ஏற்றுக் கொள்கிற மரபு இருந்து வந்திருக்கிறது. சைவ அந்தணர் குலத்தில் தோன்றிய ஆரூரர், சிவத்தின் துணையோடு உருத்திரக்கணிகையார் குலத்தைச் சேர்ந்த சங்கிலியாரையும் திருமணம் செய்துகொண்டது இதற்கு எடுத்துக்காட்டு. மயிலையில் வைசிய குலத்தைச் சேர்ந்த சிவநேசச் செட்டியார் தமது திருமகளைத் திருஞானசம்பந்தருக்கு மணம் முடிப்பதற்கென்றே வளர்த்திருந்தது இதை அரண்