பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


லுக்குள் எழுந்தருளியிருக்கும் இறைவனை எல்லாரும் புனலும் பூவும் சொரிந்து வழிபடும் உரிமையைப் பெற்றிருந்தனர். பின்னர்தான் சாதி வேற்றுமையுணர்வு தடிப்பாக மாறியதோடு, திருக்கோயில் நாட்பூசனை செய்யச் சமுதாய ரீதியாக அமைக்கப்பெற்ற சைவ அந்தணர்கள் அந்த வழிபாட்டை உலகியல் இலாப நோக்கத்தோடு இணைத்துத் தொழில் மயமாக்கிய பிறகு, சாதி வேற்றுமைகளை வற்புறுத்தினர். இன்று தமிழர்கள் வழிபடுவோர்கள் அந்த உரிமையை இழந்திருக்கின்றனர். இங்ங்னம் கூறும்பொழுது திருநாளைப் போவார் வரலாறு என்ன? என்ற கேள்வி எழும். அதற்கு விடை காண்பது அவசியமே.

திருநாளைப்போவார் வாழ்ந்த காலம் கொழுத்த நிலப்பிரபுத்துவமுறை தோன்றி நிலவிய காலம். அவர் நிலப்பிரபுத்துவத்தின் தாயகமான இருந்த தஞ்சைத் தரணியில் பிறந்தவர். தற்செயலாக நிலப்பிரபுத்துவத்தோடு உயர்சாதி மனப்பான்மை கெண்ட வேதியரிடமும் பணி செய்தவர். இவ்வளவும் சேர்ந்து அவரிடத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விட்டன. தில்லைத் திருக்கோயிலுக்குள் செல்ல அவருக்குத் தடையாக இருந்தது தில்லை மூவாயிரவர் ஆதிக்கம் மட்டுமன்று; திருநாளைப் போவாரின் தாழ்வு மனப்பான்மையும்தான். இதனை,

"தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்" என்று சேக்கிழார் குறிப்பிடுவார். ஆதலால் அவருடைய தாழ்வு மனப்பான்மையை நீக்கும் திருவுள்ளக் குறிப்பி லேதான் இறைவன் வேள்வித் தீயில் மூழ்கும் செயலைச் செய்வித்தார். இதில் தாழ்வு மனப்பான்மை தோன்றுவதற்குக் காரணமாயிருந்த சமுதாய அமைப்பு கொடுமையானதுதான். சேக்கிழார் காட்டும் சமுதாய அமைப்பில் வேறுபாடுகள் இயல்பின் காரணமாக இருக்கலாம். ஆனால் அவை பிரிவினையல்ல. அங்கு ஒருகுல உணர்வுக்குத் தடையில்லை என்பதை அறிக: அத்தகையதொரு சமுதாய அமைப்பை நாம் காணவேண்டும்.