பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெருமானைத் திருவருட் பொலிவோடு எழுந்தருளச் செய்து, வழிபட வருவோருக்குச் சிவாச்சாரியார்களாக இருந்து, உடனிருந்து வழிபாட்டைச் செய்யச் செய்து துணைநிற்கும் பணியே சிவாச்சாரியார்களின் பணி.

திருக்கோயிற் பூசையைப் "பரார்த்த பூசை" என்பர். பரார்த்த பூசை என்பதற்கு மற்றவர்களுக்காகச் செய்யும் பூசை என்பது பொருள். ஆதலால் மற்றவர்கள் வழிபடுவதற்காக இருப்பதுதான் திருக்கோயில் என்று கொள்ளவேண்டும்.

வழிபடுதல் என்பதில் புனலாட்டுதல், மலர் சொரிதல், பாடுதல், பரவுதல், ஆர்வத் துடிப்புடன் அணைத்தல், உச்சிமோத்தல் ஆகிய அனைத்தும் உண்டென்பதைச் சேக்கிழாரின் பெரியபுராணம் தெளிவாக வரையறுத்துக் காட்டுகிறது. இன்றையத் திருக்கோயில்களில் இதற்கு ஏது உரிமை? இந்த வழிபாட்டு முறை திருமுறைக் காலத்தில் இருந்தது என்பதை நமது திருமுறைகள் வாயிலாக அறிய முடிகிறது. திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருமுறையில் சற்றேறக்குறைய 97 பாடல்களிலும், திருநாவுக்கரசர் அருளிச் செய்த திருமுறையில சற்றேறக்குறைய 44 பாடல்களிலும், சுந்தரர் அருளிச்செய்த திருமுறையில் சற்றேறக்குறைய 19 பாடல்களிலும், மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகத்தில் 2 பாடல்களிலும் இந்நெறி எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கண்ணப்பநாயனார், திருநீலநக்கநாயனார் வரலாறுகளும் இதற்கு அரண் செய்வன.

நம் திருக்கோயில்களின் தல வரலாறுகள் அனைத்தையும் ஆராய்ந்தால் ஒவ்வொரு திருக்கோயிலும் இன்னின்னார் பூசித்தது என்பதை அறியலாம். இராமன் பூசித்தது இராமேச்சுரம், பாண்டவர் பூசித்தது திருமண்ணிப் படிக்கரை, வாலி பூசித்தது வாலீச்சுரம்; இப்படிப் பல திருக்கோயில்களின் வரலாறுண்டு. ஏன்? விலங்கினங்களும் புள்ளினங்களும்கூடப் பூசித்திருக்கின்றன. இன்றும் வட புலத்தில் இந்த முறை நடைமுறையிலிருந்து வருகிறது என்பது