பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

185


அதாவது மூவரருளிய திருப்பதிகங்களை ஒதி மலர் சொரிந்து வழிபடுதல்தான் திருமுறை காட்டும் வழிபாட்டு முறை. அதுவே தமிழ் முறை. திருமுறை வழிபாட்டு முறை யாண்டும் மலர்க! நமது சமய ஆசிரியன்மார்கள் அருளிச் செய்த திருமுறைப் பதிகங்களை ஓதி வழிபட்டால் துன்பம் நீங்கும்; நலமுற்று வாழலாம்; இன்பம் பெருகும். இதனைத் திருவிழிமிழலையில் அருளிய பதிகத்தில் திருஞான சம்பந்தர்,

"சினமலி கரியுரி செய்த சிவனுறை தருதிருமிழலையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரையொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவர்.எழில் மலர்மகள் கலைமகள்
சயமகள்
இனமலி புகழ்மகள் இசைதர விருநில ணிடையினி
தமர்வரே.”

(பா.11)


என்று அருளிச் செய்துள்ளார். ஆதலால், திருமுறைச் சாத்து வழிபாட்டு முறையினை நடைமுறைக்குக் கொண்டு வருக!

காதல் திருமணம்

தமிழகம் அகனைந்திணை ஒழுக்கத்தை இனிதெனப் போற்றியது. அகத்திணை இலக்கணம் பெருமானாலேயே வழங்கப் பெற்றது என்ற கொள்கை உண்டு. அதை "இறையனார் அகப்பொருள்” என்பர். தமிழரின் மனையறம் விழுமியது. அன்பும் அறனும் பெற்று விளங்குவது. அவற்றைப் பண்பும் பயனுமாகக் கொண்டு பொலிவடைவது. தமிழர் வாழ்வியலில் திருமணங்கள் நிகழ்ந்தன; செய்விக்கப் பெற்றதில்லை. தலைவனுக்கும் தலைமகளுக்கும் காதலுரிமை உண்டு. மகளிரைச் சிறைவைக்கும் அயல் வழக்கு வந்த பிறகுதான் "சிறைகாக்கும் காப்பு எவன் செயும்" என்ற வள்ளுவம் தோன்றியது! பழந்தமிழர் போற்றிய காதல் உணர்ச்சி வசப்பட்ட தன்று! உணர்வு வழிப்பட்டது.