பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சேக்கிழாரின் பெரியபுராணத்தில் பழந்தமிழர் நெறியாகிய காதல் திருமணமும் பேசப் பெறுகிறது. இடையில் வந்த திருமணமும் பேசிமுடிக்கும் திருமணமும் கூறப்பெறுகிறது. ஆனால் திலகவதியாருக்குத் திருமணம் பேசம்பொழுது குலத்திற்குக் காரணமாகிய குணம் பேசப்பெற்றதே யொழியச் சாதிமுறைகள் பேசப்பெறவில்லை. இன்று நிலவும் வரதட்சணை முதலிய கொடுமைகள் இல்லை. சுந்தரர் வரலாற்றில் பெற்றோர்வழிப் பேசி முடிக்கும் ஒரு சாதித் திருமணம் நடைபெறாமல் தடை செய்யப்படுகிறது; காதல் திருமணம் நிகழ்கிறது. சுந்தரர், பரவையாரைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளுகிறார். அது போலவேதான் சங்கிலியார் திருமணமும் நடைபெறுகிறது.

திருஞானசம்பந்தர் வரலாற்றில் திருமருகலில் நிகழும் செட்டிப் பெண் வரலாறுகூட, தான் விரும்பும் ஆடவனை மணக்க, பெண் உரிமையுடையவளாக இருந்தாள் என்பதைக் காட்டுகிறது. அதற்குத் திருஞானசம்பந்தர் முதலியோர் துணையாக இருந்தனர் என்பதும் அறியக் கிடக்கிறது. இன்றைய மனையற வாழ்க்கை மங்கலமாக அமையாமல் அதன் பயனாகிய நன்கலமும் சிறப்பாக அமையாமல் அல்லற்படுவதற்குக் காரணம் காதல் திருமணத்தைப் புறக்கணித்ததுதான். காதல் திருமணத்தில் ஆங்காங்குச் சில தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். எந்தவொரு செயல்முறையிலும் சில தவறுகள் நிகழலாம் அதற்காக அந்தச் செயல்முறையே தவறு என்று கூறுதல் ஆகாது. மீண்டும் தமிழகம் காதல் திருமணத்தில் சிறந்து விளங்குவதாக!

பெண்ணின் பெருமை

சேக்கிழாரின் பெரிய புராணத்தில் மகளிர் பெருமைப்படுத்தப் பெற்றுள்ளனர். பெண்ணடிமை என்பதோ மகளிர் ஆணின் உடைமை என்பதோ தமிழர் கொள்கையன்று.