பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

193


இன்றைய தமிழகமோ இயற்கை நியதியின் வழிப்பட்ட துன்பத்தில் வருந்துவதைவிட, அறியாமையினாலும் தன்னல நயப்பினாலும் சமுதாய உணர்வின்மையினாலும் அல்லறும் துன்பம் கொடியதாக இருக்கிறது. தீண்டாமை, சாதி வேற்றுமை, காதல் திருமணமின்மை, வறுமை, சமயந்தழுவிய வாழ்வின்மை, வாழ்வைத் தழுவிய சமயமின்மை ஆகிய பிழைகள் பெருந்துன்பம் செய்வன. இப்பிழைகளினின்றும் நாம் விடுதலை பெறும் நாள் எந்நாளோ? இந்தப் பாடல் சற்றேறக்குறைய 2300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இந்தப் பாடல் தோன்றி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரர் அதே உணர்வோடு வருந்தியதைச் சேக்கிழார் எடுத்துக் காட்டுகிறார்.

"மறையோர் வாழும் அப்பதியின்
மாட விதி மருங்கணைவார்
நிறையும் செல்வத்(து) எதிர்மனைகள்
இரண்டில், நிகழ்மங் கலவியங்கள்
அறையும் ஒலிஒன் றில், ஒன்றில்
அழுகை ஒலி வந்(து) எழலும் ஆங்(கு)
உறையும் மறையோர் களைஇரண்டும்
உடனே நிகழ்வ தென்! என்றார்”

என்பது சேக்கிழார் பாடல். இத்திருப்பாடலைச் சிந்தனை செய்யும் தமிழகமே! ஒதும் சைவ உலகமே! இத்திருப் பாடலுக்குச் செயலுருவம் கொடுக்க முன் வருக! "இரண்டும் உடனிகழ்வது ஏன்?” என்பது அன்று சுந்தரர் கேட்ட வினா. இன்றும் இந்த வினா கேட்கிறது. ஒரு வீட்டில் வறுமை; ஒரு வீட்டில் வளம். திருக்கோயிலில் செல்வச் செழிப்பு: மக்களிடத்தில் வறுமை,மடங்கள் மாளிகைகளென உயர்தல்; மக்கள் வறுமையுற்றுச் சிறுமையுறுதல். ஒரு வீட்டில் துன்பம், ஒரு வீட்டில் இன்பம். இந்நிலை சைவத்திற்கு ஏற்புடையதா? அப்படியானால் சைவம், "மேன்மை கொள் சைவ நீதி"