பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதலியோர் பதவுரை, பொழிப்புரை, விரிவுரைகள் கண்டுள்ளனர். அவையெல்லாம் நமக்கு ஒளிவளர் விளக்காக உதவிசெய்து வருகின்றன.

அடிகளின் அருளுரை:

இந்நிலையில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 45ஆவது குருமகா சந்நிதானமாக எழுந்தருளியிருந்த திருப்பெருந்திரு தெய்வ சிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள், (தவத்திரு குன்றக்குடி அடிகளார்) உரைநடையில் பெரிய புராணத்திற்கு அருளுரை சொற்பொழிவு வாயிலாக விளக்கம் தந்திருக்கிறார்கள்.

ஒருநூலைப்பற்றிப் பல கோணங்களில் பார்ப்பது உலக வழக்கு. அவற்றுள் சமய நோக்கு, சமுதாய நோக்கு, இலக்கிய நோக்கு, வரலாற்று நோக்கு, தத்துவநோக்கு முதலியனவாக விரியும்.

சமுதாய நோக்கு:

இவற்றுள் தவத்திரு அடிகளார் நோக்கு பெரும்பாலும் சமுதாய நோக்கிலேயே அமைந்துள்ளது என்பதை இந்நூலில் பரககக காணலாம.

உதாரணத்திற்கு ஒன்று சொல்லலாம். கம்யூனிசம், நமது சைவத்துடன் எல்லா வகையிலும் ஒத்து வருகிறது. ஆனால் கடவுள் என்ற ஒன்றை மட்டும் ஒத்துக் கொள்ளவில்லை என்பதே அது தவத்திரு அடிகளார் பல மேடைகளில் அருளுரையாற்றிய போதெல்லாம் கடவுட்கொள்கையில்லாத வாழ்வு, உயிரில்லாத உடம்புபோன்றது, ஊற்றில்லாத ஓடை போன்றது. அடிப்படை இல்லாத கட்டிடம் போன்றது என்று பலமுறை அருளியிருந்தும் இப்படி கம்யூனிசத்தையும் சைவத்தையும் இணைத்து இதில் எழுதியிருக்கிறார்கள் என்றால் அது எல்லோரையும் இணைத்துச் சமுதாயத்தைப் படிப்படியாகத் திருத்தவேண்டும் என்னும் நோக்கங்கொண்டதாகவே அமைகிறது.