பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருத்தொண்டர், வார்த்தை வழக்கில் இல்லை. "பொதுத் தொண்டு” செய்வதாகச் சொல்லிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் கூட "தொண்டர்" என்று கூறிக் கொள்வதில்லை; அழைக்கப்படுவது இல்லை. இன்று, பொதுத்தொண்டு எனப்படுவது எது? பெரும்பாலும் பேச்சே பொதுத்தொண்டு என்று கருதப்பெறுகிறது. ஒரோவழி, பேச்சாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும் தொண்டு என்று கருதப் பெறுகிறது.

சேக்கிழார் காலத்தில் பொதுத்தொண்டு இருந்ததில்லை. ஆனால் திருத்தொண்டு இருந்தது. பொதுத் தொண்டு மக்களைப் பாமர மக்களாக-ஏழைகளாக எண்ணிக் கொண்டு செய்வது. திருத்தொண்டு, மக்களைக் கடவுளின் குழந்தைகளாக எண்ணிக் கடவுளுக்குச் செய்வதாக எண்ணிச் செய்வது. பழைய மனப்பான்மையுடையவர்கள் நேரிடையாகச் சொர்க்கத்திற்குப் போகும் யுக்தியைச் சொல்பவர்கள் மனிதனுக்குச் செய்யும் உதவியைப் பசு புண்ணியம் என்று ஒதுக்குவர். ஆனால், மாதவச் சிவஞானமுனிவர் மனிதனாக எண்ணாமல் கடவுளின் பாத்திரமாக நினைந்து செய்தால் பசுபுண்ணியமல்ல, பதி புண்ணியம் என்றார். திருத்தொண்டராதல் எளிதன்று. அப்பரடிகள் திருத்தொண்டின் திருவுருவம்; ஆலயங்களைப் பாதுகாத்துத் தந்த அண்ணல். அப்பரடிகள் ஆலயங்களைப் பாதுகாத்தது எப்படி? "ஆலயப் பாதுகாப்பு மாநாடு" நடத்தியா? வெள்ளைத்தாளில் கருப்பு மையால் தீர்மானங்கள் எழுதியா? இவையெல்லாம் இன்றைய நம்மனோர் முறைகள். அதனால் மாநாடுகள் ஒருபுறம் கோலாகலமாக நடக்கின்றன. மறுபுறம், ஆலயங்கள், செடிகொடிகள் முளைத்து இடிந்து கொண்டிருக்கின்றன. அப்பரடிகள் உழவாரப் படைதாங்கிக் கைத்தொண்டு செய்து, திருக்கோயில்களைப் பாதுகாத்தார். சேக்கிழார், "வாய்த்தொண்டை விலக்கவே கைத்தொண்டு” என்று