பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஊனினை-உயிரினை உருக்கி உணர்வளிப்பது. அத்தகு பக்தியுடையவர்களிடத்தில் அன்பு உண்டு. எதன் மீது? பலவற்றிலா? பலவற்றின் மீதும் அன்பு - அதாவது ஆண்டவன் மீதும் அன்பு: அரண்மனை மீதும் அன்பு: சங்கரன் மீதும் அன்பு, கங்காளன் மீதும் அன்பு; காணிகள் மீதும் அன்பு என்று சிலர் சொல்வர். இது பக்தர்களுக்கு இலக்கணமல்ல; திருத்தொண்டர்களுக்கும் இலக்கணமல்ல. பக்தர்கள் பரமனுக்கு மட்டுமே அன்பு பூண்பர்; ஆட்செய்வர். கதிர்மணி தாளை இடமாகக் கொண்டு உணவெடுத்துத்தான்் வளர்ந்தது. ஆனால், அந்தக் கதிர்மணி தன்னைத் தாங்கும் தாள் நிற்கும் நிலத்திடைக் கிடக்கும் உரம், தண்ணிர் ஆகியவற்றின் மீது மாளா அன்பு கொள்ளின் மனிதனுக்கு ஏது உணவு? அதுபோல் பரமனுக்கு ஆளாம் அன்பர்கள் வாழத்துடிப்பவர்கள் அல்லர். - வாழ்விக்கத் துடிப்பவர்கள். முற்றிய கதிர் பல ஒன்றோ டொன்று இணைந்து தழுவித் தலை வணங்கி நிலத்திடைக் கிடக்கும் காட்சி, ஊன்றிய கருத்துடையோருக்கு ஒரு தத்துவப் பல்கலைக் கழகம். பத்திமையிற் சிறந்த அடியார்களின் வாழ்க்கையில் தனிமை’ இருத்தல் கூடாது; இருத்தல் இயலாது. அடியார்கள் தத்தமில் அகந்தழிஇக் கூடுவர். யார் வணங்கினார் என்று அறிந்து, கொள்ள முடியாத வண்ணம் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு தொழுவர்; வணங்குவர். மெய்ப்பாட்டு மிகுதியால் வணங்கக் கிடைத்த தம்மையும் வணங்கிக் கொள்வர்.

வணக்கம், உள்ளீடு நிறைந்தது. முற்றிய கதிர்மணி இல்லாப் பதர் வணங்காது. உள்ளீடற்ற பதர், கழனியில் தலை நிமிர்ந்து நிற்கும்; ஆடும்; சுழன்று ஆடும்; காற்று ஆட்டிய வகையிலெல்லாம் ஆடும். அதுபோல, உள்ளீடற்றவர்கள் அபாரமாக ஆட்டம் போடுவர்; செருக்குடன் ஆடுவர்; ஆசைக் காற்று அலைக்கும் வழியெல்லாம் ஆடுவர். அடியார் வணக்கம் உள் நிறைந்து புறத்தே வெளிப்படுவதேயாம்.