பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/224

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒழுக்கம், தகுதி ஆகியவற்றின் பாற்பட்டது. சாதிமுறைப்பிரிவு பிறப்பின்பாற் பட்டது. நாம் நெறி தவறிக் கிடக்கின்ற பிறப்பின் வழிப்பட்ட சாதிமுறைகளை நினைத்துக் கொண்டு குலமுறைகளைப் பற்றிய சிந்தனையை மறந்து விட்டோம்.

பார்ப்பனக் குலம்! இது பழங்காலத்துக் குலமுறையில் தலையாய குலம். இந்தப் பார்ப்பனரையே தொல்காப்பியம், 'அறிவர் என்றும் திருக்குறள் அந்தணர் என்றும் எடுத்துக் கூறின. பார்ப்பனர்', 'அறிவர் என்று அழைக்கப் பெற்றவர் முதிர்ந்த அறிஞர்கள். உயிர்களுக்கெல்லாம் ஒதுவித்து, ஞானம் நல்குபவர். அவர்கள் ஒழுக்கம் தண்ணளியே! மனு தொல்காப்பியத்தோடு திருக்குறளோடு இந்த அடிப்படையில் மாறுபடவில்லை. ஆனால், நமக்கு பார்ப்பனர் என்றவுடன் கோபம் வருவது ஏன்? நமக்குச் சோற்றுக் கடை நடத்துகின்ற சுப்பிரமணிய ஐயர் முதல், அரசுப்பணி மனையில் ஏவல் கேட்டொழுகும் பணிக்குப் போட்டிபோடும் அரிகரஐயர் வரை நினைத்துக் கொண்டு மாழ்குகின்றோம். சோற்றை விலைக்கு விற்பவன் பார்ப்பனல்லன். காசுக்குக் கல்வியை விற்பவன் பார்ப்பனல்லன், நாளைய வாழ்க்கையைப் பற்றிச் சலனப்படுபவன் பார்ப்பனனல்லன். போர்முனை அறியாதவன் சூத்திரியன் அல்லன். வாணிகம் செய்யாதவன் செட்டி அல்லன் உழாதவன் வேளாளன் அல்லன். இதனையே நமது தலைமுறைப் புரட்சிக் கவிஞன் பாரதி,

                "பார்ப்பனக் குலம்
                கெட்டழி வெய்திய
                பாழடைந்த கலியுகம்."

என்று பேசினான். குலமுறைப் பிரிவு, தகுதி சீலத்தின் பாற்பட்டுப் பிரிக்கப்பட்டவை. குலங்களின் தகுதி, சீலத்திற்கு ஏற்றவாறு தொழில் மாறுபடுதல் தவிர்க்க முடியாதது. ஒத்த உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் காலத்திலும் மிகப்பெரிய மாளிகையில் வாழும் குடியரசுத் தலைவர்