பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இன்று இரு அடியார்கள்கூடத் தமக்குள் இப்படி அறிமுகப்படுத்திக் கொள்வதில்லையே! இன்று உலா வரும் அடியார்களுக்குள் இருக்கும் பிணக்குகள் வாஷிங்டனுக்கும் மாஸ்கோவுக்கும் இருப்பதைவிடக் கூடுதலாகவே இருக்கின்றன. எப்படி மனித சமுதாயத்தில் அன்பு வளரும்? தோழமை வளரும்? பெருமையை விளம்பரத்தைத் துறக்காத துறவு இப்போதையத் துறவு.

ஆரூரர், உடன் அடியார்களை அணுகுகிறார். அடியார்களை அணுகி வணங்கித் தொழுதலைத் துன்பம் துடைக்கும் நெறியென்று ஆரூரர் பரவுகின்றார். ஆம்! ஆண்டவன் முன்னே யாரும் பணிந்து விடுவார்கள். ஆனால், அடியார்களை நோக்கும் போதுதான்் தராதரங்கள் பார்ப்பார்கள். இன்றைய சமுதாயத்தில் தராதரம் மட்டும் பார்ப்பதில்லை. சாதிகளும் பார்ப்பார்கள். ஆரூரர், அடியார்களின் பண்பைத் தாம் எப்படி ஏத்தமுடியும்? என்று சிந்திக்கின்றார். இறைவன், "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடி எடுத்துக் கொடுக்கின்றார். இறைவன் எடுத்துக் கொடுத்த அடியினைக் கொண்டு தம் சிந்தனையில் நினைவுக்கு வரும் அடியார் களையெல்லாம் தனித்தனியே பாடித் தேவாசிரிய மண்டபத்திலிருந்த அடியார்களைப் பணிகின்றார். இங்ங்னம் அடியார்களை வணங்கி வாழும் முறையைச் சேக்கிழார் தமிழ் முறை என்று பாராட்டுகின்றார்.

ஞானம் வருதலுக்குத் தாழ்வு உணர்ச்சி தேவை. இங்குத் தாழ்வு உணர்ச்சியென்பது குறைமனப்பான்மையன்று. சிலத்திலும் தவத்திலும் நோன்பிலும் மெய்ப்பொருள் அறிவிலும் மிக்குயர்ந்தோர், தம்மை அடக்கத்துக்கு ஆளாக்கிக் கொள்வதற்குத் தாழ்வு என்று பொருள். தாழ்த்தப்பட்டு வந்த தாழ்வல்ல; தாழ்த்திக்கொண்ட தாழ்வு. இத்தாழ்வுணர்வு தழைக்கும் நெஞ்சில், நான் இல்லை; எனது இல்லை; வேண்டுவன இல்லை; வேண்டாமை இல்லை;