பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/234

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொன் வேண்டும். எங்கே போவார்? அவர் பொன் வேண்டிப் புகுந்த இடம் திருப்புகலூர்! திருப்புகலூர் இறைவனை வணங்கி மகிழ்ந்து அருகில் இருந்த முற்றத்தில் திருப்பணிக்காகக் கொண்டு வந்து போட்டிருந்த செங்கல் ஒன்றை எடுத்துத் தலையணையாக வைத்துக்கொண்டு, துண்டை விரித்துப் படுத்துத் துரங்கினார். பொன் கவலையால் தூக்கம் வரவில்லை. இடையில் விழித்துப் பார்க்கிறார். தலைக்கு வைத்திருந்த செங்கல்லே செம்பொன் கட்டியாக விளங்கியமை கண்டு திருப்புகலூர் இறைவன் புகழைப் போற்றுகின்றார்.

அப்போது பாடிப் பரவும் பாடலில் "எதிரில் இன்பம் இம்மையே தருவார்’ என்று விளக்குகின்றார். இறைவனை ஏத்துவது மறுமை இன்பத்துக்காக மட்டுமல்ல. இம்மையிலேயே எல்லையற்ற இன்பங்களை ஆர்ந்து அனுபவிக்கலாம். உலக இன்பங்களைத் துய்த்து மகிழ்தல் இறைநெறிக்கு முரணானதன்று. இவ்வுண்மைகள் சுந்தரர் வரலாற்றினால் பெறப்படுகின்றன.

திருப்புகலூரில் சுந்தரர் பாடுகின்றார்.
        
        "தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
              சார்கினுந் தொண்டர் தருகிலாப்
        பொய்ம்மை யாளரைப் பாடாதே யெந்தை
             புகலூர் பாடுமின் புலவீர்காள்
        இம்மை யேதரும் சோறும் கூறையும்
             ஏத்தலாம் இடர் கெடலுமாம்
        அம்மையே சிவ லோகம் ஆள்வதற்கி
              யாதும் ஐயுற வில்லையே:
(திருப்புகலூர் - )

இத் திருப்பாடலில் உலகத்துச் செல்வந்தர்களின் பொய்ம்மையை இடித்துக் காட்டுகிறார். செல்வந்தர்களைச் சார்ந்து, அவர்களைப் புகழ்ந்து, அவர்களுக்கு அடிமைகளாய் வாழ்ந்தாலும் அவர்கள் எதையும் எளிதில் தந்து விடுவ