பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

227


எடுத்துக் கூறிப் பாராட்டி உயர்த்துகின்றார். திருப்பாண்டிக் கொடுமுடித் திருத்தலத்திலிருந்து நம்பிகள் கொங்கு நாட்டுப் பேரூருக்குச் செல்கிறார்.

என்இனிப் புறம்போய் எய்துவது?

கொங்குநாடு சிறப்புடைய நாடு. காஞ்சி நதி பாய்ந்து வளப்படுத்தும் நாடு. சுந்தரர் வரலாற்றில் கொங்கு நாடு மையம் கொண்டுள்ளது. சுந்தரர்பேரூர் வந்தணைகிறார்; பேரூர்த் திருக்கோயிலில் தில்லையில் கண்ட திருநடனக் காட்சியைக் காண்கிறார். இது ஒர் உபாசனை மரபு. அதாவது தமது மனங்கவர்ந்த மூர்த்தியைச் சென்ற இடத்திலெல்லாம் பார்ப்பது. சுந்தரர் தில்லையில் ஐந்து பேரறிவும் கண்களே கொள்ளப் பார்த்தவர்; வணங்கியவர். அந்த ஞானானுபவம் தொடர்கிறது. ஆடல்வல்லானின் ஆனந்தக் கூத்தைப் பேரூரில் காண்கிறார். கண்ட அளவில் அன்பு ஊற்றெழுகிறது! புலன்களைக் கடந்த மெய்யுணர்வில் திளைக்கிறார்: புலன்களைக் கடந்த இன்பத்தினை ஆர்கிறார்: சிவானந்த இன்பத்தில் திளைத்த சுந்தரர் அருள்பொலிவுடைய ஆண்ட கையானார். திருநடம் கும்பிடும் பேறு பெற்றமையை நினைந்து நினைந்து மகிழ்கிறார்! மகிழ்வின் பெருக்கில் இனிப் புறம்போய்த் தொழுவது என்னனென்று வினவுகின்றார்!

இதனால் இத்திருத்தலம் ஆடல்வல்லான் திருத்தலமாயிற்று. இதனை மேலைச் சிதம்பரம் என்றும் போற்றுவர். இன்றும் இத்தலத்தில் ஆடல்வல்லான் சந்நிதி திருவருட் பொலிவுடையதாக விளங்கி வருகிறது. சுந்தரரின் செந்தமிழ் வளர்க்கும் சாந்தலிங்க முனிவர் திருமடம் இத்தலத்தில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டுக்கு, சுந்தரர் காலம் முதல் இன்றுவரை பேரூரே சிறந்த திருவருள் நிரம்பிய திருத்தலம். பேரூரில், பெருகிய சிவஞானம் பெற்றுப் பொலிந்த சுந்தரர் பயணத்தைத் தொடர்கிறார்! வெஞ்சமாக் கூடல் வந்து சேர்கிறார்!