பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

231


விருப்பம் கொள்ளாமல் திருமுதுகுன்றுக்குச் செல்ல நினைந்து பயணம் செய்கின்றார். திருமுதுகுன்று நோக்கிச் செல்லும் ஆரூரரை - சுந்தரரைப் பெருமான் கூடலை யாற்றுாருக்கு வழிகாட்டி அழைத்துச் செல்கின்றார். திருமுதுகுன்று நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ஆரூரருக்குத் திருமுதுகுன்றத்திற்கு வழி தெரியவில்லை. வழிகாட்டுபவனாக இறைவனே வந்து திருமுதுகுன்றத்திற்குச் செல்லும் வழி என்று கூடலையாற்றுக்குரிய வழியைக் காட்டி முன் செல்கின்றார். கூடலையாற்றுார் அருகில் சென்றவுடன் வழிகாட்டியரைக் காணோம். ஆரூரர் நிகழ்ந்தது அறிந்து அதிசயித்து இன்றமிழ்ப் பாடல்களால் படிப்பரவுகின்றார்.

திருக்கூடலையாற்றுாரில் அருளிய பாடல்கள் பொருள் பொதிந்தவை. இறைவனை அடிகள் என்று அழைக்கின்றார். வழிகாட்டும் ஆசிரியனாய் அமையும் பொழுது அருள் நலம் சார்ந்த அடிகளாதல் மரபு. ஆயினும் இங்கு அடிகள் என்றமை அநீதிகளைச் சாடுவான் என்பதை உணர்த்த "வடிவுடை மழுவேந்தி” என்றும் "மதகரியுரிபோர்த்தும்" என்றும் அருளிச் செய்தமை யறிக ஆம் அநீதிகளை அழித்தல் அருளுடைமைக்குப் புறம்பன்று. இதுவே சமுதாய நியதி. ஒறுத்தல் மட்டுமே ஆளுமைப் பண்பல்ல - அருளுதலும் ஆளுமைப் பண்பேயாம். இறைவன் அருளும் இயல்பினன் என்பதை உணர்த்த “புரிகுழல் உமையாளொடு” எழுந்தருளி யுள்ளான் என்றருளிச் செய்து தேற்றுகின்றார். திருக்கூடலை யாற்றுார் வளமானவூர் வண்மையாளர் வாழுமூர். ஆதலால், கொடி மாடங்கள் உடைய கூடலையாற்றுார் என்றார். அதனாலன்றோ இறைவன் ஆண்டவனாகவும் அதே போழ்தில் ஆர்வலனாகவும் இருந்தருள் புரிகின்றான். ஆர்வம் என்பது அன்பின் முதிர்ச்சியாகி -வலிய மேற்சென்று அன்பு காட்டுதல். அது எல்லையற்ற அன்பாக விரியும். வாளா அன்பு உணர்வாக இல்லாமல் முயற்சியும் கூடி வாழ்வித் தருளும் உணர்வுக்கு ஆர்வம் என்று பெயர். "அன்பினும் ஆர்வம் உடைமை" என்றார் திருவள்ளுவர்.