பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருமுதுகுன்றத்திற்குப் போகும் முன் திருக்கூடலை யாற்றுருக்கு வரச்சொல்லி வழி மறித்ததிலும் ஒரு குறிப்புணரலாம். அதாவது வாழ்க்கையில் முதுமைக்கு முன் நிகழ்வன நிகழவேண்டாமா? முதுமை வருதலுக்கு முன்பே வாழும் வழி ஈதெனத் துணிந்து அவ்வழி நடத்தல் கடமையன்றோ? அதனால், தடுத்து - வழியில் நடத்தியருள் கின்றார்.

சேக்கிழார் நெஞ்சம் - சிவ நெறியில் - சித்தாந்தச் சிவ நெறியில் பதிந்தது. சித்தாந்தச் சமயமே சமயம், சித்தாந்தச் சமயமே செழுந்தமிழ் வழக்கு; சித்தாந்தச் சமயமே வெற்றி பெறவேண்டும்; அயல் வழக்குகள் பின் தள்ளப்பெறுதல் வேண்டும் என்ற உணர்வுகள் பெரிய புராணத்தைப் பயில்வாருக்கு வராமல் போகாது.

நம்பி ஆரூரர் திருமுதுகுன்றத்துக்குச் செல்லாமல் தடுத்து - திருக்கூடலையாற்றுாருக்கு வழிகாட்டிய இறை வனின் செயலை எடுத்துக் கூற வந்த சேக்கிழார் "ஒப்பரும் புகழார் செல்லும் ஒரு வழி” என்று அருளிச் செய்கின்றார். ஒப்பற்ற புகழினை உடைய அறிஞர்கள் விரும்புகின்ற சமயம் - சித்தாந்தச் சிவநெறியே என்று விளக்குகின்றார். உயிர்கள் உய்தலுக்குரிய நெறியாகிய சமயத்தை வழியெனக் கூறுதல் மரபு. இங்கனம் உயிர்களுக்கு உய்திகாட்டும் வழிகளாக - உலகில் பல சமயங்கள் நிலவுகின்றன. அச்சமயங்களில் எல்லாம் ஒன்றாக உயர்ந்து சிறந்து விளங்குவது சித்தாந்தச் சமயமேயாம். மற்ற சமயங்கள் எல்லாம் உய்யும் நெறி காட்டுவதில் தலைதடுமாறிப் போயின. ஏன்? தெளிவின்மையால் வேதாந்தத் தெளிவு சைவசித்தாந்தம் என்பர். பல்வேறு நெறியில் வாழ்ந்து - எய்த்துக் களைப்பான வர்களை - எய்ப்பிலிருந்தும் ஏமாற்றத்திலிருந்தும் மீட்கத் தோன்றி எழுந்த சமயம் சித்தாந்தச் செந்நெறியே! இறைவன் சிவபெருமானே!