பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/246

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நாதர்பால் பொருள் வேண்டல்

நம்பி ஆரூரர், திருக்கூடலை யாற்றுாரிலிருந்து திருமுது குன்றம் செல்ல எண்ணிப் பயணத்தைத் தொடங்கினார். தேவார காலத்தில் - சேக்கிழார் காலத்தில் திருமுதுகுன்றம் என்ற தீந்தமிழ்ப் பெயர் நிலவிய திருமுதுகுன்றம் சமஸ்கிருத ஆர்வலர்களால் விருத்தாசலம் என்று மாற்றப்பட்டு விட்டது. இன்றும் வழக்கில் விருத்தாசலம் என்றே வழங்கப்பெறுகிறது. இதுபோல் நூற்றுக்கணக்கான திருத்தலங்களின் பெயர்களை சமஸ்கிருதப் படுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை என்பது அழகான தமிழ்ப்பெயர். அது மாயவரம் ஆயிற்று. புரட்சித்தலைவர் எம்.ஜி. இராமச் சத்திரன் தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு மாயவரம் என்ற பெயரை மயிலாடுதுறை என்று மாற்றித் தமிழ்மக்கள் நெஞ்சில் மகிழ்ச்சியூட்டி யுள்ளது. தமிழ்நாடு முழுதும் இங்ங்ணம் பெயர் மாற்றங்களைச் செய்யத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

தென்னார்க்காடு மாவட்டம் திருமுதுகுன்றம் நல்ல அழகான ஊர். இவ்வூர் மணிமுத்தாற்றங் கரையில் இயற்கைச் சூழலுடன் அமைந்து வளர்ந்து வருகிறது. திருமுது குன்றம் என்பது பெயர். ஆனால் குன்றைக் காணோம். குன்று இருந்து நிலத்திடை அமிழ்ந்திருக்க வேண்டும். குன்று உண்டு என்று பொருள் கொண்டால் திருவருள்மலை என்ற பொருளிலும் உருவகமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? திருமுது குன்றம் நான்குதிசைகளிலும் பெரிய நிலைகளையுடைய அரசகோபுரங்களைக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் திருக்கோலம் காண்போரை யெல்லாம் ஈர்த்திடும் தன்மையது.

ஆரூரர் இத்திருக்கோயிலில் நுழைந்து முறையே வலம் வந்து இறைவன் திருமுன்பை யணைந்து செந்தமிழ்ப் பாமாலை பாடுகின்றார்.