பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/248

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"கோதறு மனத்துட் கொண்ட குறிப்பொடும்” என்பது சேக்கிழார் வாக்கு. சுந்தரர் குற்றமற்ற மனத்தினராகவே பாடுகின்றார். சந்தரருக்குப் பொருள் தேவை! ஆனாலும் வெளிப்படையாகக் கேட்கவில்லை; குறிப்பால் புலப்படுத்துகின்றார். அதாவது கேட்டுப் பெறுவதை விட அவரே கொடுத்துப் பெற்றால் நல்லது என்ற கருத்து நம்பி ஆரூரருக்கு! ஆனால், பதிகம் வாழ்வியலின் உணர்வுகளை யெல்லாம் சித்திரித்துக் காட்டுகிறது. இதனைச் சுந்தரர் பொதுவாக உணர்த்திப் பாடுகிறார். "ஒரு குடுக்கையில் பஞ்சை அடைப்பதினால் குடுக்கை உடைந்து விடுமோ” என்று கேட்கிறார். அதாவது இறைவன் அடியார்க்கு அருளுவதன் மூலம் யாதொருகுறையும் அவனுக்கு வராதே என்பது கருத்து. அடியவர்கள் இறைவனின் அருள் இன்று கிடைக்கும்; நாளை கிடைக்கும் என்று ஏங்கியிருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் இறைவன் அருளைப் பெறாமலே இறந்து போனால் என்ன செய்வது? "அவர்கள் இறந்து போன பிறகு நீ என்ன செய்யப் போகிறாய்? செய்யக் கூடியது ஒன்றுமில்லையே!” என்று இறைவனுக்கே எடுத்துக் கூறும் நிலையும் அமைந்துள்ள இப்பாடல் அருமையானது. ஆழ்ந்த வாழ்வு அனுபவத்திற்குரியது. ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் பயன்படக் கூடியது.

உலகியல் கடந்த அருளியல் இல்லை

இறைவன், வேண்டுவார் வேண்டுவதே ஈவான். அன்பர் மனத்துள் நின்ற கருத்தறிந்து முடிப்பான். ஆரூரருக்கும் அவர்தம் மனம் மகிழப் பன்னிரண்டாயிரம் பொன் வழங்கியருள்கின்றான். ஆரூரர் பொன் பெற்ற பின்னரும் இறைவனிடம் வேண்டுகோள் வைக்கின்றார். ஆம்! திருமுதுகுன்றத்திற்கும் திருவாரூருக்கும் இடையில் உள்ள தூரம் ஏறத்தாழ 120 கல். இவ்வளவு தூரம் யாரால் பொன்னைச் சுமந்து வரமுடியும்? எடுப்பிற்கெல்லாம் வாய்ப்பிருக்கும்போது தூக்கிச் சுமக்கத்தான்் மனம் வருமா?