பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/271

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

259


செய்த பிழையா? அப்படியேதான்் பிழை என்று எடுத்துக் கொண்டாலும் திங்கள் செய்த பிழைகளைவிடவா நான் பிழை செய்து விட்டேன். பிழைகள் பல செய்த திங்களையே ஆதரித்துள்ளிர் என் மனைவி பரவையார் நல்ல குணமுடைய பெண். இப்போது நீர் பொன் கொடுக்கத் தாமதித்தால் அவள் குணம் திரிந்தால் நான் என்ன செய்ய இயலும்?' என்றெல்லாம் பொருள் குறித்த அருமையான ஒரு பதிகத்தைப் பாடித் தொழுகின்றார்.

பொன் எடுத்தல்!

பொன் கிடைத்து விடுகிறது. ஆரூரர் பொன் முடிப்பை எடுத்துப் பரவையார் பார்வையில் வைத்து உரைப்பொன் ஆணி கொண்டு பொன் முடிப்பின் நடுவிலிருந்த ஒரு பொன்னைச் சோதித்துப் பார்க்கிறார். பொன் முடிப்பில் இருந்த பொன் மாற்றுக் குறைந்ததாக இருக்கிறது. ஆருரருக்கு அதிர்ச்சி. மீண்டும் வருத்தமுறுகின்றார். இத் தருணத்தில் பாடிய பதிகம் கிடைக்கவில்லை. ஆனால் பதிகத்தை அன்பில் வரும் பாட்டு என்று புகழ்ந்துரைக்கின்றார் சேக்கிழார். பாடுவன வெல்லாம் பாட்டாகி விடாது. பெருகிய அன்பில் பாடும் பாட்டே பாட்டு. அன்பே காரணமாக அன்பிலே ஊறி அன்பையே நோக்கமாகக் கொண்டு உள்ளத்தெழுந்து வரும் பாடல்களே பாடல்கள்! நம்பியாரூரர் பாடல்கள் இத்தகையன.

சிந்தை நிறை மகிழ்ச்சி!

ஆரூரரின் அன்புப் பெருக்கில் நனைந்த நற்றமிழ்ப் பாடல்களைக் கேட்டு இறைவன் களிப்பெய்தினான். ஆரூரருக்குப் பொன் கொடுக்கக் கூடாதென்பதல்ல இறைவன் திருவுள்ளம்! நம்பியாரூரரின் பாடல்களைக் கேட்டு மகிழ்வதற்காகச் செய்த விளையாட்டு - கூத்து! மீண்டும் ஆரூரர் திருக்குளத்தில் இறங்குகின்றார். இறைவன்,