பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/273

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

261


"பாறு தாங்கிய காடரோ, படு
தலைய ரோ, மலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழகரோ, குழைக்
காதரோ குறுங்கோட்டிள
ஏறுதாங்கிய கொடியரோ, சுடு
பொடிய ரோ, விளங் கும்பிறை
ஆறு தாங்கிய சடைய ரோதமக்
கடிக ளாகிய அடிகளே”.

-(ஏழாம் திருமுறை)


தலைவராகிய இறைவன் சுடுகாட்டில் வாழ்பவரோ என்பது முதல் வினா! அருள் நூல்களில் இடுகாடு என்று குறிக்கப் பெறுவது உலகியல் சுடுகாடு அல்ல! கடையூழி காலத்தில் பரசிவத்தைத் தவிர மற்றெல்லாம் அழியும்! அந்த யுக அழிவு நிலையையே இடுகாடு என்று கூறகின்றனர். அடுத்த கேள்வியும் இப்பொருளின் தொடர்புடையதாக அமைந்திருப்தை ஓர்ந்தறிக. கையில் உயிரற்ற தலைகளை ஏந்தித் திரிபவர்! ஆம்! இறைவன் கையில் நான்முகனின் மண்டையோட்டினைஏந்தி வையகத்தை நோக்கி இரக்கின்றான்! தத்துவம் செறிந்த கருத்து! நான்முகன் வேதங்களின் தலைவன். அவனே அழியாநிலை அறியாமல் அழிந்து போன நிலை உணரத்தக்கது. கற்பது பெரிதல்ல! அறிவின் ஆக்கம் வேண்டும்! மண்டையோட்டில் இரக்கின்றான் என்றால் மண்டையோட்டிற்குள் வைப்பது சோறன்று. அறிவேயாம். ஆதலால் வையகத்து மக்களை நோக்கி அறியாமையை இடுங்கள் என்றுணர்த்துவதே மண்டையோடு தாங்கி இரத்தல்.

அடுத்து 'மலைப் பாவையோர் கூறு தாங்கிய குழகரே!' என்ற வினா! பெண்மைக்குச் சமயம் தந்த ஏற்றத்தை இந்தப் பகுதியால் அறிய முடிகிறது. வாழ்க்கையில் ஒரு பாகமே பெண்ணாகின்றாள், பெண்மையைப் பெருமைப் படுத்திப் பேண வேண்டியது ஆடவர்க்கழகு; அழகுக்கு அழகு.