பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/279

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

267


கலந்த நிலையில் அருளிச் செய்கின்றார். இப்பதிகத்திலேயே தன்னுள் இறைவன் புகுந்தமையை நினைந்து பாடுகின்றார். அதேபோழ்து இறைவன் வெளியே போகாமல்-உள்ளத்தே பேணித்தாம் கொண்டமையை "என்னுயிருட் புகுந்தாய்இன்னம் போந்தறியாய்" என்று அருளிச் செய்துள்ளார். இந்தப் பதிகத்தில் அடைக்கலம் தரும் உணர்வும்,துணையாய் அமைய வேண்டும் என்ற வினாவும் நின்னைத் தவிர துணைவேறல்ல என்ற நிலையும் ஈரத்தன்மை உடைய கருத்துக்கள்.

திருநின்றியூரில்

பின் திருவலம்புரம் வணங்கி, திருச்சாய்க்காடு தொழுது திருவெண்காடு பணிந்தேத்தித் திருநின்றியூர் போய்ச் சேர்ந்தார். திருநின்றியூரில் நம்பியாரூரர் சிலநாள் தங்கியுள்ளார். அப்போது "திருவும் வண்மையும்" என்று தொடங்கும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். இத்திருப் பதிகத்தின் பொருளடைவு நெஞ்சு நெகிழச் செய்வது; அன்பினால் கரைந்துருகச் செய்வது. இத் திருப்பதிகம்-இறைவன் ஆட்கொள்ளத் தக்கவரை ஆட்கொள்ள நிகழ்த்திய திருவிளையாட்ல்கள் பலவற்றைத் தொகுத்து அடைவு செய்து பாடியுள்ள பதிகம்; ஒரு அருமையான பதிகம். இறைவன் பலரை ஆட்கொண்டருளிய செய்திகள் கேட்டு, ஆரூரரும்- "ஆட்கொள்ளப் பெறுவேன்” என்ற எண்ணத்தில் வந்ததாக அருளியுள்ளார்.

செப்பரிய புகழ் நீடூர்

ஆரூரர், திருநின்றியூர் வணங்கி மகிழ்ந்து மேலும் யாத்திரையைத் தொடங்குகின்றார். யாத்திரையில் திருப்புன் கூரை நோக்கிப் பயணமானார். திருப்புன்கூரை நோக்கிச் செல்லும் பொழுது அண்மையில்-வழியில் இருந்த நீடுர் திருத்தலத்தைச் சென்று பணியாது சென்றார். பொதுவாக