பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/289

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

277



ஆவியிலும் அடைவுடையார்

திருத்தினை நகரிலிருந்த நிலையில் ஆரூரருக்குத் திரு நாவலூர் நினைவுக்கு வருகிறது-கருத்திற்கு வருகிறது! பிறந்த மண் அல்லவா? எல்லோருக்கும் அவரவர் பிறந்த மண்ணின் மீது ஒரு தனி விருப்பம் இருப்பதுண்டு. பலகாலும் ஓடி விளையாடிப் பழகிய நிலமல்லவா? இதற்கு ஆரூரரும் விதி விலக்கல்லர். திருநாவலூர் செல்லும் வழியில் திருமாணிகுழி, திருப்பல்லவ நகரம், திருமுண்டிச்சரம் திருக்குணபரவீச்சுரம், திருவதிகைவீரட்டம், திருவாமூர், சித்தவடம், திருமணம் வந்த புத்துார் ஆகிய திருத்தலங்கள் வழியே திருநாவலூர் வந்தணைந்தார். திருநாவலூரின்கண் வாழ்வோர் மிக்க மகிழ்ச்சியோடு ஆரூரரை வரவேற்கின்றனர். ஆரூரர் திருநாவலூருக்கு வரும் நாள் "பெருவாழ்வு" வரும் நாள் என்று எண்ணி மகிழ்ந்து வரவேற்றனர். வரவேற்பில் உழவர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். ஆரூரர் திரு நாவலூரில் எழுந்தருளியுள்ள ஆவியினும் அடைவுடையார் அடிக்கமலம் தொழுது வணங்குகின்றார். திருப்பதிகம் பாடியருளினார். ஆவியிலும் அடைவுடையார் என்பதற்கு, ஒருவர்க்கு அவர்தம் உயிர்நிலை செய்யும் உதவியிலும் மிகக் கூடிய உதவியைச் செய்யும் இறைவர் என்பது கருத்து. அதனால் இறைவனைச் சார்பாகக் கொண்டொழுகுதல் பயனுடைய வாழ்க்கை.

திருநாவலூர் வந்து சேர்ந்த நம்பி ஆரூரர் தமிழ்ப்பதிகம் ஓதி வழிபாடு செய்தார். இத்திருப்பதிகம் சிறந்த பொருட் செறிவு உடையது. இத்திருப்பதிகத்தில் நம்பி ஆரூரர் தமது வரலாற்றைப் பற்றி விவரித்துப் பாடுகின்றார். திருவெண்ணெய் நல்லூரில் இறைவன் ஆட்கொண்ட வரலாறு எடுத்துக் கூறப்பெறுகிறது. திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயிலில் உள்ள நாட்சபையில் ஆவணங்காட்டி ஆட்