பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/290

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்ளப் பெற்றார் என்ற செய்தி தெளிவாக ஐயத்திற்கிடமின்றி எடுத்துக் கூறப்பெற்றுள்ளது.

"நாட்சபைமுன்
வண்மைகள் பேசிட வன்றொண்டன்
என்பதோர் வாழ்வுதந்தார்”

"வெண்ணெய் நல்லூரில்
        வைத்தெனை ஆளுங்கொண்டார்”

என்ற பதிகத்தின் வரிகள் நினைவில் கொள்ளத்தக்கன. நம்பியாரூரர் பல நாள் திருநாவலூரில் தங்கி வழிபட்டார். திருநாவலூரிலிருந்து திருக்கழுக்குன்றத்திற்குப் பயணம் செய்தார்.

திருக்கழுக்குன்றம், செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள ஓர் அழகிய சிற்றூர். மலைமீது திருக்கோயில் இருக்கிறது. மாணிக்கவாசகர் திருக்கழுக்குன்றத்தில் எழுந்தருளியுள்ள அம்மை அப்பர் மூர்த்தியைத் "தொன்மைக்கோலம்" என்று புகழ்ந்துரைக்கின்றார்.

"தோலும் துகிலுங் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்துரதாய் கோத்தும்பீ”

என்பது திருவாசகம். தமிழ்நாட்டு வரலாற்றில், தொன்மைக் காலத்தில் அம்மையப்பர் திருமேனியை வழிபடுந் திருமேனியாகக் கொண்டொழுகு வந்திருக்கின்றனர்.

ஐங்குறுநூற்றில்,

"நீல மேனி வாலிழை பாகத்
தொருவ னிருதா னிழற்கீழ்
மூலகை யுலகு முகிழ்த்தன முறையே"

என்ற பாடலும் ஒப்பு நோக்கத்தக்கது.