பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/291

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

279



பிச்சையெடுத்த பெருமாள்!

திருக்கழுக்குன்றத்தில் நம்பியாரூரர் பலநாள் தங்கியிருந்து வழிபாடு செய்தார். அதன்பின், உள்ளத்தில் வளர்ந்த சிவஞானப் பெருக்கு உணர்வில் திளைத்த வண்ணம் திருக்கச்சூரைச் சென்றடைந்தார். திருக்கச்சூர், வரலாற்றுப் புகழ்மிக்க திருத்தலம். சமூக விஞ்ஞானம் வெளிப்பட்டு ஒழுக்கமாகச் செயற்பட்ட திருத்தலம்.

திருக்கச்சூர், ஊர்ப்பெயர்: திருத்தலத்தின் பெயர் திரு ஆலக்கோயில், தலமரம் '(தலவிருக்ஷம்) ஆலமரம், ஆதலால் ஆலக்கோயில் என்று பெயர்பெற்றது. இறைவனின் பெயர், ‘விருந்திட்ட நாதர்'. அம்மையின் பெயர் உமையம்மை. இங்கு தியாகராசர் சன்னதியும் உண்டு. இத்திருக்கோயிலில் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சியில் அமைத்த ஒரு கல்வெட்டில், திருக்கோயிலில் "அறிஞர் அவை இருந்தது தெரியவருகிறது. இது ஒரு நல்ல மரபு. இப்போது இல்லை. திருக்கோயில் வளர்ச்சியில் பெரிதும் ஆர்வம் காட்டும் மாண்புமிகு அமைச்சர் ஆர். எம். வி. அவர்கள் இத்துறையில் கவனம் செலுத்துவது நல்லது. திருக்கோயிலுக்கு மேற்கே மருந்துமலை, (ஒளக்ஷத கிரி) என்ற பெயரில் ஒரு மலை இருக்கிறது. இங்கு விருந்திட்ட ஈசர் பெயரில் சன்னிதி விளங்குகிறது. நம்பியாரூரர், திரு ஆலக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனை தமக்கு இன்னமுதாய் விளங்கிய பெருமானை அன்புருக வழிபாடு செய்து புறம் போந்தார். இப்படி வந்தநேரம் நண்பகல் பொழுது, உணவருந்தும் நேரம். ஆரூரருக்குப் பசி, திருவமுது ஆக்கித்தரும் பரிசனமும் வந்து சேரவில்லை. பசித்துன்பத்துடன் திருக்கோயிலின் முன்றிலில் நம்பியாரூரர் அமர்ந்திருந்தார். சேக்கிழார் இந்த இடத்தில் நயத்தக்க நகைச்சுவையுடன்,

"தணந்தபசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில்
புணர்ந்தமதிற் புறத்திருந்தார். முனைப்பாடிப்
                                  புரவலனார்”