பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/292

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று கூறுகின்றார். "புரவலரும்" பசியால் வருந்தும் நிலை, அதுவும் தன்னேரில்லாத தலைவன் தம்பிரான்தன் திரு வாயிலில்! மலையின்மேல் எழுந்தருளியிருக்கும் இறைவன் மருந்தீசன்! ஆம்! பசியும் பிணியேயாகும்! பசிப்பிணிக்குரிய உணவும் மருந்தேயாகும்! உணவளிக்கும் ஈசன் மருந்தீசன்!

வன்றொண்டரின் பசி பொறாத இறைவன், உடனே முன்பு இருந்த பலி ஓடு நீத்துத் திருவோடு ஏந்திப் புறப்பட்டு ஆரூரரை வந்தணுகினார். தாம் சோறு இரந்து கொண்டு வருவதாகக் கூறி எங்கும் போகாது, தாம் வரும்வரை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு இல்லங்கள் தோறும் சென்று சோறும் யாசித்தார்! இறைவன் இரந்துதான் ஆரூரரின் பசிநீக்க வேண்டுமா? வேறு வழியில்லையா? நூறாயிரம் வழிகள் உண்டு! ஆனால் இரந்தூட்டும் வழியே மிகமிகப் பயனுடைய படிப்பினையைத் தரும்வழி! தமக்கு அன்புபட்டவர் துயரினை இரந்தாகிலும் மாற்றுவதே அறம், சால்பு கடமை நிறைந்த பெருவாழ்வு என்பதனை உணர்த்த இதனினும் சிறந்த வழி ஏது? இறைவன் இரந்து சேர்த்த உணவை ஆரூரர் முன் கொண்டுவந்து கொடுத்தான்! ஆரூரர் அந்தணாளரின் திறம் நினைந்து தொழுது வணங்கி வாங்கினார்! வாங்கிய திருவமுதைத் தமது திருக்கூட்டத்தினருடன் உண்டுகளித்தார்! அந்தப் பொழுதில் திருவமுது கொண்டுவந்தருளிய அருகிருந்த அந்தணாளரைக் காணவில்லை! ஆரூரர் அமுதளித்தவன் இறைவன் என்று உணர்ந்து இறைவன் தன் பொருட்டாக வீடுகள்தோறும் இரந்துவந்து ஊட்டிய அளப்பிலாக் கருணையை நினைந்து நினைந்து உருகிப் பாடுகின்றார்.

"கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
       கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவே கச்சூர்
        ஆலக் கோயில் அம்மானே!”

என்றும்,