பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/295

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

283


காஞ்சிபுரம் என்பது உலகியல் வழக்கு கச்சி ஏகம்பம் என்பது திருமுறை வழக்கு மீண்டும் கச்சி ஏகம்பம் என்ற வழக்கையே நடைமுறைக்குக் கொண்டு வருதல் நல்லது.

திருக்கச்சி ஏகம்பம் ஐம்பூதத் திருத்தலங்களுள் ஒன்று. அதாவது மண் (பிருதிவி) திருத்தலம் என்பர். திருத்தல வெண்பா பாடியருளிய ஐயடிகள் காடவர்கோன் ஆண்ட திருத்தலம். நம்பியாரூரர், அம்மையப்பன் கருணையால் இடக்கண் பெற்ற திருத்தலம். மற்றும் திருக்குறிப்புத் தொண்டர், சாக்கியநாயனார் முதலானோர் வாழ்ந்து, தொண்டு செய்த திருத்தலம். இங்கு எழுந்தருளியுள்ள அன்னையின் திருப்பெயர் காமாட்சி. அன்னை காமாட்சி அண்ணலைப் பூசித்த திருத்தலம்; முப்பத்திரண்டு அறங்கள் இயற்றிய திருத்தலம்; எண்ணற்ற ஆலயங்கள் நிறைந்த திருத்தலம். கந்த புராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் வாழ்ந்து கந்தபுராணம் இயற்றி அரங்கேற்றியதும் இத்திருத்தலமேயாம்.

இத்திருத்தலத்திற்குக் கற்கக் கற்கச் சுவையமுதுாறும் வகையில் புராணம் இயற்றியுள்ளார் மாதவச் சிவஞான முனிவர். காஞ்சிப் புராணம் ஒரு நல்ல தமிழ் நூல்; தத்துவங்களை எளிதில் விளக்குவது. காஞ்சிபுரத்தின் சிறப்புகளுள் முதன்மையானது, அன்னை உமையே சிவத்தைப் பிரிந்து வந்து இங்குப் பூசித்ததாகும். அன்னை காஞ்சிபுரத்தில் பெருமானை நினைந்து பூசித்துத் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். நாள்தோறும் கம்பமாநதியில் மணலில் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்துகொண்டிருந் தார். எதிர்பாராமல் ஒருநாள் கம்பமாநதியில் வெள்ளப் பெருக்கு வந்தது. வெள்ளத்தில் சிவலிங்கம் அழியாமல் பாதுகாக்க அன்னை சிவலிங்கத்தை அனைத்துக் கொள்கிறார். வெள்ளம் வற்றுகிறது. பெருமான் திருமேனியில் வலையல் அடையாளங்கள் இன்னும் காணலாம். அடுத்து காஞ்சிபுரத்துக்கு ஏற்பட்ட பெருமை; பல்லவப் பேரரசின்