பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/296

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புகழ்மிக்க தலைநகரமாக விளங்கியதாகும். வடமொழியையும் தமிழையும் வளர்த்த நகரம்; சிறந்த பல்கலைக் கழகங்கள் விளக்கமுற இருந்த நகரம். அப்பரடிகள் வரலாற்றில் திருப்பு மையத்தை உருவாக்கிய திருத்தலம். இத்தகைய காஞ்சிபுரம் தமிழின வரலாற்றில் புகழ் பெற்ற நகரம்.

இங்ஙனம் பழங்காலத் தொட்டு இன்றுவரை புகழ் பெற்று வளர்ந்து வருகின்ற, காஞ்சிபுரத்திற்கு கச்சி ஏகம்பத்திற்கு நம்பியாரூரர் எழுந்தருளினார். நம்பியாரூரர் தம் வாழ்வில் திருவெண்ணெய்நல்லூரில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைந்து பாடுகிறார். திருவெண்ணெய் நல்லூர் இறைவனையே கச்சி ஏகம்பத்தில் பெற்றதாக நினைந்துருகி வழிபடுகின்றார். கச்சிமாநகர் மக்கள் நம்பியாரூரரை எதிர் கொண்டழைத்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் நம்பியாரூர ருக்கு நடந்த வரவேற்பில்-வரவேற்பு மங்கலப் பொருள்களாகச் சிலவற்றைச் சேக்கிழார் எடுத்துக் கூறுகிறார். மணித்தோரணம், நிறைகுடம், நிறைவிளக்கு, தூபம், கொடி முதலியன கொண்டு வரவேற்கின்றனர். திரண்டு வந்த அடியார் திருக்கூட்டத்தினருடன் திருக்கோயில் நண்ணினார்; திருக்கோபுர முன்றிலிலேயே திருமேனி நிலந்தோய வணங்கி மகிழ்ந்தார்.

ஏகம்பநாதர் புண்ணியமூர்த்தி, அப்பரடிகள் தமது அருமையான தமிழால் ஏகம்பத்தில் உறை இறைவனை வாழ்த்திப் பாடியுள்ள பாடல்கள் நெகிழ்வைத் தரவல்லன. நம்பியாரூரர் ஏகம்பநாதரை நினைந்துருகிப்பாடி வழி பட்டார். கண்ணிழந்து துன்புறு நிலையில் கண் வேண்டிப் பாடுகின்றார். நம்பியாரூரர் அருளிய பதிகத்தில் பாடல் தோறும் அம்மை பூசித்த வரலாற்றை நினைந்துருகிப் பாடுகின்றார்.

"எள்க வின்றி இமையவர் கோனை
      ஈச னைவழி பாடுசெய் வாள்போய்