பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/297

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

285



உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
          வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
           வெருவிஒ டித்தழு விவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக்
            காணக் கண்அடி யேன்பெற்ற வாறே."

(சுந்தரர் - திருக்கச்சி. பா. 10)

என்ற பாடல் நினைந்தின்புறத்தக்கது. இத்திருப்பதிகத்தில் பாடல்தோறும், "கம்பன் எம் மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே" என்று பாடியருளியுள்ளார். இதனால், நம்பியாரூரர், இத்திருத்தலத்தில் ஒற்றைக் கண்ணை-இடக்கண்ணை அம்மையின் திருவருளால் பெற்றார் என்ற வரலாறு உணரப்படுகிறது. இத்திருத்தலத்தில் அம்மையின் தண்ணருள் நிறைந்து விளங்கியதால் இடக்கண் என்றும் உய்த்துணர்தல் இனிய இன்பமாகும்.

மாறா விருப்பிற் புறம் போந்தார்

நம்பியாரூரர் காமக்கோட்டம் தொழுது வணங்கிய பின் திருமேற்றளிச் சென்று பதிகம் அருளிச் செய்து வழிபாடு செய்கின்றார். காஞ்சிநகரத்தில் மட்டும் பல திருக்கோயில்கள் உண்டு. இதில் திருக்கச்சிமேற்றளி ஒன்று. இத்திருத்தலத்தில் அருளிச் செய்துள்ள பதிகத்தினைச் சேக்கிழார் “பாரார் பெருமைத் திருப்பதிகம்" என்று பாராட்டுகின்றார். இறைவனை வணங்கி அந்த மெய்யுணர்வைத் துய்ப்பதில் மாறாத விருப்பங்கொண்டுள்ளார் நம்பியாரூரர். அவர் “மாறா விருப்பினொடு திருக்கோயிலுக்கு வெளியே வருகிறார்” என்பது அறியத்தக்கது.

வன்தொண்டர் திருக்கச்சி மேற்றளி தொழுது பாடிய திருப்பதிகம் நிறைந்த பொருளுடையது. தத்துவ விளக்கங்கள் பொதிந்துள்ள பதிகம். இறைவழிபாட்டில் நினைப்பே