பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொண்ட இலக்கியங்கள் பல கண்டமொழி, உயிர்த் தொடர்பான காதல் பற்றிய இலக்கியமும் இலக்கணமும் எளிமையும் இனிமையும் இயையப் படைத்த மொழி; வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறியினைக் காட்டும் வள்ளுவமறை படைத்த மொழி, ஊன் கரைத்து உயிர் வளர்த்து உள்ளொளி பெருக்கும் திருவாசகத்தைப் பெற்ற திருமொழி; தொண்டர்நாதனைத் தூது கொண்ட தொன்மொழி; முதலையுண்ட பிள்ளையைப் பாரினில் தந்த மொழி, எலும்பைப் பெண்ணாக்கிய இறையருள் நிறைந்த இன்ப மொழி. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலக இனங்களின் வரலாற்றையும் தமிழின வரலாற்றையும் ஒப்புநோக்கினால், தமிழினத்தின் மூத்து முதிர்ந்த வளர்ச்சி, தெளிவாகத் தெரியும். வாழ்க்கை அருமையானது; வாழ்வது ஒரு கலை; வாழ்க்கைக்கு நெறியும் முறையும் உண்டு; வாழ்க்கை இலட்சிய நோக்குடையது; குறிக்கோளில்லாத வாழ்க்கை கூடைச் சாம்பலுக்கே; குறிக்கோளுடன் கூடிய வாழ்க்கையே குவலயம் போற்றும் வாழ்க்கை என்று வாழ்க்கைக்கொரு சிறப்பான குறிக்கோளைச் சமயநெறி வழியாகத் தந்து மனித வாழ்க்கையை வளப்படுத்திய மொழியும் தமிழே!

சிவநெறியின் மாண்பு


தமிழர்கள் வரலாற்றறிவுக்கு எட்டாத காலந்தொட்டே சமயநெறியைக் கண்டும், அந்நெறியில் நின்று ஒழுகியும் வந்துள்ளனர். தமிழகச் சமயநெறி செயற்கை வடிவம் கொண்டதன்று. சிறந்த வாழ்வின் படிமுறை வளர்ச்சியில் வளர்ந்து முழுமைநலம் பெற்ற பெருநெறியாகும். தமிழகச் சமயம், செம்பொருட்டுணரிவெனப்படும். "சித்தாந்தம்" என்று பெயர்பெறும். அஃதாவது, சிந்தனையின் எல்லை கண்ட முடிபு-முடிந்த முடிபு என்பது அதன் பொருளாகும். இன்று உலக அரங்கில் சமய நெறிக்கு மாறுபாடாக எழுந்துள்ள