பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/300

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வியந்தோதுகின்றார். யாதொரு குறையுமில்லை என்பது கருத்து.

ஆரூரன் அடியான்

உயிர்கள் மேற்கொண்டுள்ள வாழ்க்கைப்பயணம் 'கருவூரில்' தொடங்குகிறது. இன்பபுரியில் முடிகிறது. ஒரே பயணமாக இடைச் சுற்றின்றி முடிந்தால் நல்லது. பலருடைய வாழ்க்கை அங்ஙனம் முடிவதில்லை. செத்துப் பிறக்கும் தொழிலுக்கே இரையாகியவர்கள் எண்ணிக்கையே மிகுதி. இவர்கள் தாயர் உலகத்திற்கும் இடுகாட்டு எரியூட்டும் தொழிலாளர்க்கும் ஓயாது வேலை கொடுப்பவர்கள்; இரங்கத் தக்கவர்கள்; ஏன் இந்த அவலம், நல்ல துணையை நாடி அடைவதில்லை. உயிர்களின் வாழ்க்கைப் பயணத்திற்குத் தனித் துணையாக விளங்கக்கூடியவன் இறைவனே யாம். மற்றவர் துணையெல்லாம் தொடர்ந்து வருபவை அல்ல. பலர் ஆசைகளின் காரணமாகப் பிரிந்து விடுவர். தன்னலந் துறந்து அன்பு பொழிந்த தாயும் செத்துப் போகிறாள். சிலர் அவர் தம் குறை காரணமாக நமக்கும் குறையுடைய வழியே காட்டுவர். இறைவன் ஒருவனே தன்னலம் இல்லாதவன். அதனால் அவன் கவனம் எல்லாம் நம்பாலதாகவே அமையும். இறைவன் திருவருளே குறைவிலா நிறைவு. ஆதலால் இறைவன் ஒருவனே குறையற்ற வழிகாட்ட இயலும். ஆதலால் இறைவனே உயிர்களுக்குற்றத் துணை, தனித்துணை என்று கூறி ஆற்றுப்படுத்துகின்றது இந்தப் பதிகம். இத் திருப்பதிகம் தன்னை ஆட்கொண்டருளிய ஆரூரருக்கே தான் வழியடிமை கொண்டிருப்பதை விளக்க 'ஆரூரரன் அடியவன்' என்று வியந்து கூறுவது அறிக.

தோழமைத் திறனும் அடிமைத் திறனும்

திருக்கச்சிமேற்றளியைத் தொழுது மகிழ்ந்த நம்பியாரூரர் பயணத்தைத் தொடர்கிறார். கச்சியேகம்பத்திற்குச்