பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/301

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

289


சிறிதுதொலைவில் உள்ள திருவோணக்காந்தன்தளி என்ற திருத்தலத்திற்குச் செல்கிறார். ஒணன், காந்தன் என்கிற இரண்டு அசுரர்கள் பூசித்த திருத்தலமாதலால் அவர்கள் பெயரிலேயே இத்திருத்தலம் விளங்கி அழைக்கலாயிற்று. இந்த வரலாற்றால் பழங்காலத்தில் எல்லோரும் திருக் கோயிலில் இறைவனைப் பூசிக்கின்ற உரிமை பெற்றிருந்தனர் என்பது தெரியவருகிறது. இரண்டு மூர்த்திகள் ஒரே திருக் கோயிலுக்குள் அமைந்துள்ளன.

இத்தலத்தில் நம்பியாரூரர் அருளிச்செய்த பதிகம், நலம் பல உடையது. தோழமைத்திறமும் அடிமைத்திறமும் ஒருசேர விளங்கத்தக்க வகையில் பதிகம் அமைந்துள்ளது; அருமையுடையது. தோழமைத் திறத்தைக் கேலிப்பேச்சுக்களாலும் அடிமைத்திறத்தை ஏவல்கேட்பதாலும் அறியலாம். தோழமை யுடையாரில் பலர், தோழமையின் பாற்பட்ட சலுகையால் அடிமைத்திறம் அறியார்; அடிமைத்திறம் காட்டமறுப்பர். ஆனால் நம்பியாரூரருக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு தோழமை வழிப்பட்டதேயாம். ஆனாலும் நம்பியாரூரர், இறைவனுக்கு அடிமைத்திறம் பூண்டொழுகுவதிலும் சிறந்து விளங்கினார். நம்பியாரூரர் கொண்ட அடிமைத்திறம் பெருகும் அடிமைத்திறமாகும். அதாவது, அடிமை பூண்பதில்கூட சோர்வு படாமை என்றறிக "கையிலொன்றும் காணமில்லை" என்பது, நம்பியாரூரரின் வறுமை நிலையைக் காட்டுகிறது. அதாவது காசு ஒன்றும் கையில் இல்லாத நிலை. பூசையின் மரபுகூறி காணம் இல்லை என்றதால் பூசனை செய்யப் பொருள் வேண்டும் என்பதாயிற்று. இறைவழி பாட்டில் ஈடுபட்டால் ஐம்பொறிகளும், ஐம்புலன்களும் ஒத்துழைக்கும்; குற்றேவல் செய்யும். பூசையில் ஈடுபடுத்தப் பெறாத பொறிகள், புலன்கள் துன்பக்குழியில் வீழ்த்தும் என்பது உண்மை.

இத்திருப்பதிகத்தில் உள்ள அனைத்துப் பாடல்களுமே நாள்தோறும் ஒதத்தக்கன; நயமுடையன

கு.IX.19