பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணி உம்கழல் ஏத்து வார்கள்
மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
மதியு டையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆவற் காலத் தடிகேள் உம்மை
ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
ஒண காந்தன் தளியு ளிரே"


"பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணி உம்கழல் ஏத்துவார்கள்”

என்ற அடிகள் பன்முறை படித்தின்புறத்தக்க அடிகள்.

வாழ்க்கையில் நட்பு முதலிய உறவுகள் தவிர்க்க இயலாதன. வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உறவுகள் தேவை. இந்த உறவுகள், உறவுகளுக்காகவே என்று அமையுமானால் பெரிதும் சிறந்து விளங்கும். அங்ஙனமின்றி யாதானும் ஒன்றை எதிர்பார்த்து நட்பும் உறவும் கொள்ளின் இத்தகு நட்பும் உறவும் வணிகமாகி விடும், அதாவது, இலாப நோக்குடையதாக அமைந்துவிடும். "இலாபம்" என்ற சொல்லே கொச்சைத்தனமானது. இலாப நோக்கு, தன்னலமே நாடும். மற்றவர் நலம் பற்றிக் கவலைப்படாது. இத்தகையோர் தாம் விரும்பிய ஒன்றினையடையும்போது மகிழ்வர், நட்பினைப் பேணுவர். யாதானும் ஒரு காரணத்தால் விரும்பியதைப் பெறாதபோழ்து பிரிவர்; நெஞ்சிற்பிரிவர்; காழ்ப்பும் பகையும் கொண்டு தீமையும் செய்வர்.

நட்பு, உறவுகள் விலைமதிக்க ஒண்ணாதன. இவை வாழ்க்கையின் இணையற்ற குறிக்கோளை அடையத் துணைசெய்வன; ஆக்கம் பயப்பன; இறைவனை உறவாகவும் நட்பாகவும் கொண்டு வாழ்தல் தமிழ் மரபு. அச்சம் வழிப்பட்ட நிலையிலோ விருப்பங்களுக்காட்பட்ட