பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

19


கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிசத்தை ஈடுகொடுக்கக்கூடிய உண்மைத் தகுதி, தத்துவச் செழுமை தமிழகச் சமயநெறிக்கே உண்டு. கம்யூனிசக் கொள்கைக்கும் நமது சமய நெறிக்கும் இருக்கின்ற ஒரே வேறுபாடு கடவுள் நம்பிக்கை ஒன்றுதான். ஆனாலும் மனித உலகம்-அவற்றின் அமைப்பு-சமநிலைச் சமுதாயம் ஆகிய துறைகளில் கம்யூனிசத்திற்கும் நம்முடைய சமயநெறிக்கும் முரண்பாடுகள் இல்லை என்பதை அறிவிக்க மகிழ்கின்றோம். கடவுள் மறுப்புக் கொள்கையினால் எழுப்பப்படும் வினாக்கள் அனைத்தையும் இயல்பிலேயே வாழ்க்கையின் அனுபவப்படிகளில் ஆராய்ந்து தெளித்து முடிவெடுக்கப்பெற்ற-வளர்ந்த ஒருநெறி தமிழகச் சமயநெறி. "சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி” என்று திருமுறை சிறப்பிக்கும் திருநெறி. தமிழகச் சமய நெறி, கற்பனையிற் கருக்கொண்டதன்று; சிந்தனையிற் செழித்து வளர்ந்த செந்நெறி. தமிழகச் சமயம் சிந்தனையில் முன்னுக்குப்பின் முரணில்லை. அது நம்பிக்கைக்கும் நல் வாழ்க்கைக்கும் ஏற்றது; ஐயத்திற்கிடமின்றித் தெளிவுற அமைந்த அருள்நெறியாகும். சிவ்ம் பெயர் மட்டுமன்று. அதுவே இன்பம், மெய்யுணர்வு, திருவடி ஞானம், உலகம் எல்லாமே!

தமிழகச் சமயநெறியை வாழையடி வாழையாகப் பலர் போற்றி வளர்த்தும், வளர்த்தாங்கு ஒழுகியும் திருவருளால் சிறப்புறச் செய்திருக்கின்றனர். சங்க கால இலக்கியங்கள் கடவுள் நெறிபற்றி நிரல்பட நிறையப் பேசவில்லை. அருமையாகவே ஆங்காங்குப் பேசுகின்றன. எனினும், அவற்றிலிருக்கிற அளத்தற்கரிய ஆழமும் அகலமும் நினைந்து நினைந்து மகிழத்தக்கன.

"நீல மணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயே”

(புறம். 91)