பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/314

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நம்பியாரூரரை அறிமுகப்படுத்துகின்றார். இறைவன் சங்கிலியாரின் திருமனைக்கு எழுந்தருளி வந்திருப்பது அவர் தவத்திற்கு வரம் கொடுக்க அல்ல. நம்பியாரூரருக்கு மனம்பேச வந்துள்ளார். ஆயினும் சங்கிலியார் தவத்தின் அருமையினை உணர்த்துவான் வேண்டி சாருந்தவத்துச் சங்கிலி கேள்! என்று இறைவன் தொடங்குகின்றார். தவத்தின் செல்வம் சங்கிலி நாச்சியார். இறைவன் நம்பியாரூரரை அறிமுகப்படுத்தும் பண்பு கவனிக்கத் தக்கது. சங்கிலியாரை மணம்புரிய விரும்பும் நம்பியூரர் மேருமலையின் மேம்பட்ட தவத்தினையுடையவர். திருஒற்றியூரிலுள்ள ஈசனிடம் நிறைந்த அன்புடையவர். திருவெண்ணெய் நல்லூரில் நம்மால் ஆட்கொள்ளப்பட்டவர். உன்னைத்தருமாறு என்னை இரந்து நிற்கிறார். இரப்பார்க்கொன்று ஈவதே மரபு. சங்கிலி நம்பியாரூரருடன் மணம் செய்து கொள்வாயாக என்றார்! தமிழர் மரபில் தவமும் திருமணமும் மாறுபட்டதன்று என்பது நம்பியாரூரர் வரலாறு, மாயவாதம், பெளத்தம், சமணம் முதலிய சமயங்கள் தமிழகத்தில் பரவி மானுட வாழ்க்கையைக் கொச்சைப் படுத்தின. காதல் மனையற வாழ்க்கையை இகழ்ந்தன. இந்த வழக்கு செழுந்தமிழ் வழக்கிற்கு மாறானது. செழுந்தமிழ் வழக்கைத் தமிழகத்தில் நிலைபேறு கொள்ளச் செய்யவும், காதல் மனைவாழ்க்கைத் தமிழகத்தில் நிலைபேறு கொள்ளச் செய்யவும், காதல் மனைவாழ்க்கை மரபு வளரவும் திருவுள்ளம் பற்றிய இறைவன் நடத்திய திருவிளையாடலே நம்பியாரூரர் வரலாறு. சங்கிலியார் உடன்படுகின்றார். பெண்மைக்கே உரிய வகையிலும் தமிழ் நாகரிக வரம்பு நிலை உணர்த்தும் வகையிலும் திருவாரூரில் நம்பியாரூரர் பெரு விருப்பம் கொண்டவர் என்பதை ஈசன் அறிந்தருளுவது நல்லது என்று உணர்த்துகின்றார். ஆம்! பரவையாரும் பரவையாரைத் தந்தருளியவனும் உறைவது திருவாரூர் அல்லவா? திருஒற்றியூர் ஈசன் சங்கிலியாரின் குறிப்புணர்ந்து நின்னைப் பிரியா வகையில் சபதம்