பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/319

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

307


செய்த துரிசுகளுக்கு எல்லாம் இறைவன் தோழமை நிலையில் உடந்தையாக இருந்ததை நம்பியாரூரர் நினைந்து நினைந்து உருகிப்பாடுகின்றார். திருவாரூர் தொழும் விருப்பம் கனிந்து மேலோங்குகிறது.

ஒருநாள் திருவொற்றியூர் இறைவனை வணங்கிக் கொண்டு, திருவொற்றியூர் விட்டகன்று திருவாரூர் செல்லும் பயணத்தைத் தொடங்கினார். திருவொற்றியூரினின்றும் பிரிவதில்லை என்ற சபதத்தை மறந்தார்; சபதம் வேலை செய்தது. கண்கள் இரண்டும் ஒளி மழுங்கின; ஒளி குறைந்தன. செய்வதறியாது சுந்தரர் மூர்ச்சித்து நின்றார்; திகைத்தார். சபதத்தால் இது நிகழ்ந்தது என்று உணர்கின்றார். எந்தநிலையிலும் சிவமே தனித்துணை ! நம்பியாரூரர் உடன் பாடத் தொடங்குகின்றார். இத்தருணத்தில் பாடிய திருமுறைப் பாடல்கள் அற்புதமானவை.

"அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்
அதுவும் நான்படற் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன்
வழுக்கி விழினும் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே."

(ஏழாந்திருமுறை 550)


"இறைவா! திருவொற்றியூர் உறையும் இறைவா! கிராமப்புறங்களில் ஆட்டுப்பால் கறப்பார்கள். அப்போது அந்தப் பாலில் ஆட்டுப் பிழுக்கை விழுந்துவிடும். ஆட்டுப் பிழுக்கை விழுந்தமையின் காரணமாக அந்தப் பாலை யாரும் தூக்கி ஊற்றி விடமாட்டார்கள். பாலில் விழுந்த பிழுக்கையை எடுத்து எறிந்து விட்டுப் பாலைப் பயன்