பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று ஒளவையார் பாடுகிறார். சிவநெறிகாட்டும் செம்பொருள்-தமிழர் தம் வழிபடு கடவுள், பிறப்பையும் இறப்பையும் கடந்த பொருள் என்பதை எவ்வளவு நுட்பமாக விளக்குகின்றார்! இளங்கோவடிகள் இந்த அடிகளுக்கு உரைகறி விளக்குவார் போல,

        "விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
        உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்”

(சிலப். 12. வேட்டுவவரி)

என்று அருளியிருப்பது அறிந்து இன்புறத் தக்கது. மேலும், "பிறவா யாக்கைப் பெரியோன்” என்று கூறி எந்நெறிக்கு மில்லாத தனித்தமிழர் நன்னெறியுண்மையினை நயம்பெற நாட்டுகின்றார்.

அடுத்து, சமயநெறிகளில் மிகவும் சிக்கலான செய்தி, உயிர்களைப்பற்றியதேயாம். தமிழகச் சமயநெறியாகிய சிவநெறியைத் தவிர, மற்றைச் சமயங்களெல்லாம் உயிர் பற்றிக் கொண்டுள்ள கொள்கைகள் வளர்ந்துவரும் அறிவியலுக்கும் உலகியலுக்கும் இசைந்தனவாக இல்லை. பெரும்பான்மையான சமயங்கள், கடவுள் உயிர்களைத் தன்னினின்றும் படைத்தான் என்று கூறுகின்றன. உயிர்கள் இயற்கையில் குறையுடையன. கடவுள் நிறை பொருள். ஒரு நிறையிலிருந்து குறை தோன்றமுடியாது. குறையிலிருந்து வளர்நிறை தோன்றலாம். அதுவே, பரிணாம வளர்ச்சி; உலகியல் நியதியுங்கூட. ஆனால், குறைவிலா நிறைவாகவும், கோதிலா அமுதாகவும் உள்ள கடவுட் பரம்பொருளினின்று தோன்றப்பெற்ற பொருள்கள் குறையுடையனவாக இருத்தல் முடியாது; இருத்தலுங் கூடாது. இதைவிடப் பேராபத்து, உயிர்களே பரம்பொருளின் பிரதிபலிப்புகள் என்றும், பரம்பொருளின் பகுதியென்றும் கூறும் கொள்கை! அக்கொள்கையினர் ஒரு குடத்திலுள்ள நீர் பரம்பொரு ளென்றும் அதில் ஒரு திவலை உயிர் என்றும் எடுத்துக்