பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/326

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாடல் வழி மறுக்கிறார். இவரே, "இம்மையே தரும் சோறும் கூறையும்” என்று அருளியுள்ளமையும் அறிக சித்தாந்த சிவநெறியைப் பொறுத்தவரையில் இம்மை நலன்கள் புறக்கணிக்கப்படுவதில்லை. இம்மையிலேயே முத்தராகக் கூட ஆகலாம். அவர்கள் தான் சீவன்முத்தர். “மதுரையில் இம்மையே நன்மை தருவார் கோயில்" என்று ஒரு திருக்கோயிலும் இருக்கிறது.

இந்தப் பதிகம் மேலும் மேலும் பல தன்மைகளை, உண்மைகளை விளக்குவனவாய் அமைந்துள்ளன.

பிரிவு, தீது! பேயொடு பழக்கம் ஏற்பட்டு விட்டது! பழகும் பொழுது பேயின் இயல்புகளும் புலனாகின்றன. அது பேய் என்று தெரிந்த பிறகும் பிரியக்கூடாது. பேயுடன் கூட இருப்பதைவிட, பேயைப் பிரியும் பொழுது அதிகத் தீமை ஏற்படும். இறைவா! நான் என்ன செய்ய? விளக்க முடியவில்லை. ஒருவன் கனியை விரும்புகின்றான்; ஆனால் கனி கிடைக்கவில்லை. காய் கிடைத்தது. அதனால் கனி கிடைக்கவில்லையே என்று கவலைப்படக்கூடாது. காயை ஏற்றுக் கொள்ள வேண்டும். திருவாரூர் இறைவா! நான் நாய் போல உன் கண்ணில்படுமாறு திரிகின்றேன்! நானே உமக்கு ஆட்பட்டவன்! ஏன் வாய் திறந்து ஒரு வார்த்தை கூறக்கூடாதா? போனால் போகட்டும்! வாழ்ந்து போவீர்! உமக்கே பழி! என்று பலப்பலவாக நட்புரிமையினால் பாடினார்; பரவினார்; ஏசினார்.

இந்தப் பதிகத்தை கேட்டருளிய திருவாரூர்ப் புற்றீசர், வலக் கண்ணைக் கொடுத்தருளினன்! இப்பதிகத்தினைத் தொடர்ந்து ஒதின் கண்ணொளி பெறலாம் என்பது இன்றும் உள்ள நம்பிக்கை

திருவாரூர் வந்த நம்பியாரூரர் திருக்கோயில் வழிபாட்டுக்குச் செல்கிறார். அவருடன் வந்த பணியாட்கள் மாளிகைக்குச் செல்கிறார்கள் செய்தி கூற; செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய! ஆனால், பரவையார் மாளிகைக்குள் நுழைய முடியவில்லை. புறத்தேயே நிற்கிறார்கள்!