பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/328

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருவடிகளைக் காணலாம்” என்று சிலம்பொலி அழைப்பதாகத் செந்தமிழ்ச் சேக்கிழார் அருளும் நயம் படித்து அனுபவிக்க வேண்டிய பகுதி.

பரவையாரின் திருமாளிகைமுன் சிவபெருமான் வந்து சேர்ந்தான். தம்முடன் வந்தாரை யெல்லாம் பரவையார் மாளிகைக்குச் சற்று தூரத்தில் நிற்குமாறு பணித்துச் சிவபெருமான், சிவவேதியன் திருக்கோலம் கொண்டான்! பரவையார் மாளிகையை நண்ணினான். பரவையாரின் மாளிகை வாசற்கதவு சாத்தியிருந்தது. சிவவேதியன் கதவைத் தட்டினான். 'பாவாய்' - என்று பரிவுடன் அழைத்துக் கதவைத் திறக்கும்படி வேண்டினான். பரவையார் கண் துயிலாநிலையில் இருந்தார்; கதவைத் தட்டி அழைத்தவர் சிவவேதியராக இருப்பார் என்று துணிந்தார். கதவைத் திறந்து, சிவவேதியரை வரவேற்று அழைத்துச் சென்றார். "ஐய! இறைவன் எழுந்தருளியது போலக் காட்சி! ஐயன்மீர்! இங்கு எழுந்தருளியது எதற்கு?” என்று பரவையார் கேட்டார்.

சிவவேதியர் "நான் சொல்வதை நீ மறுக்காது ஏற்றுச் செய்ய உடன்பட்டால் சொல்லலாம்” என்றார். அதற்குப் பரவையார் புத்திசாலித்தனமாக, "ஐய, நீர் விரும்புவதை அருளிச் செய்தால், அது எனக்கு இசைவாக இருக்குமானால் செய்யலாம்" என்றார். சிவவேதியர் "நம்பியாரூரர் இங்கு வரவேண்டும்" என்றார். பரவையார் "பங்குனி உத்திரத்திற்கு வந்திருந்தார். பின் என்னைப் பிரிந்து சென்றார். பிரிந்து சென்றவர் திருவொற்றியூரை அடைந்து ஆங்குச் சங்கிலியாருடன் தொடர்பு கொண்டார். சங்கிலியாருடன் இணைந்து வாழ்ந்தார். சங்கிலியாருடன் வாழ்க்கை நடத்தும் ஒருவர் இங்கு என் வீட்டிற்கு வர என்ன நியாயம் இருக்கிறது? சிவபெருமானே ஆயினும் இதற்கு வரலாமா? அதுவும் நள்ளிருளில் வரலாமா? நிரம்ப அழகுதான் என்றார்!” சிவவேதியர் திருக்கோலத்தில் இருந்த பெருமான் பரவையாரின் பேச்சைக் கேட்டு மனத்திற்குள் சிரித்துக்