பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

37


தலைவியும் நோன்பிருந்து பெற வேண்டிய ஒன்று. திருஞான சம்பந்தரை ஈன்று புறந்தந்த குடும்பத்தின் பெருமையை என்னென்று கூறிவாழ்த்துவது? வீட்டுக்குப் பிள்ளை தேடுவோர் பலர். ஆனால், சிவபாத இருதயர் நாட்டுக்குப் பிள்ளை வேண்டினார். ஞாலமுய்ய நாமுய்ய நாளும் சைவ நன்னெறியின் சீலமுய்ய மகப்பேறு வேண்டினார். இதனைச் சேக்கிழார்,

"......பரசமய நிராகரித்து நீறாக்கும் புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றும் தவம்

                              புரிந்தார்"
-12 சம்பந்தர்-19

என்று புகழ் பொருந்தக் குறிப்பிடுகிறார். இங்ங்ணம், திருத்தோணிபுரத்திலிருந்த ஈசனை ஊற்றெழும் அன்பால் வழிபட்ட தாயின் மணிவயிற்றில் திருஞானசம்பந்தர் தோன்றினார். அருளியல் தவம் செய்து பெற்ற குழந்தை யாதலால், ஞான மதலையாக இருந்தது. மூன்று வயதில் அழுகிறது! உடலுறவாகிய சீகாழித் தந்தை தாயரை நினைந்து அழவில்லை. உயிர்க்குத் தாயும் தாதையுமாகிய மங்கை பங்கனை நினைந்து அழுகிறது! வேதங்கள், "ஐயா!” எனத் தேடியலையும் பரம்பொருளை விரலாற் சுட்டிக் காட்டிக் குறிகளும் அடையாளமும் நின்றதோர் கோலமும் குறித்துணர்த்தி நம்மையாட்கொண்டது அந்தக் குழந்தை!

சேக்கிழார், பொறுத்தாற்றும் பண்பை வாழ்த்துகிறார்! ஆனால், அதே திருவாயினால் ஒறுத்தாற்றும் பண்பாம் வெகுளியையும் வாழ்த்துகிற்ார். ஆனால், சேக்கிழாரிடத்தில் முரண்பாடில்லை. வெகுளாமை ஒதிய திருவள்ளுவரும், வெகுண்டு ஒதிய இடங்கள் உண்டு. வெகுளல் இடம் பொறுத்து நன்றாகவும் தீதாகவும் அமைகிறது. தற்சார்பான நலன்கள் கருதி வெகுளல் தீது, சமுதாயப் பொது நீதி-பொது நியதி கருதி வெகுளல் நன்று. மெய்ப்பொருள் நாயனாரின் பொறுத்தாற்றும் பண்பைச் சேக்கிழார் வாழ்த்துகின்றார்.