பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


 சேக்கிழாருக்கு உடன்பாடுடையதன்று. இதனைக் கண்ணப்ப நாயனார் வரலாற்றில், சேக்கிழார் வெளிப்படுத்துகிறார். சிவகோசரியார் ஆகமச் சடங்கின் திருவுருவம் கண்ணப்பர் அன்பின் திருவுருவம், கண்ணப்பருடைய தூய அன்பில்தான் காளத்தியப்பன் ஈடுபடுகிறான். காளத்தியப்பன், கண்ணப்பரைக் காட்டி உண்மை வழிபாடு இதுவேயெனச் சிவகோசரியாரைத் தெருட்டுகின்றான்.

"அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம்என்றும் அவனுடைய நிலைஇவ்வா றறிநீஎன் றருள்செய்தார்”

(157)

என்று சேக்கிழார் அந் நிகழ்ச்சியைப் பாடுகின்றார். ஆதலால், சேக்கிழாரின் சமயம் பத்திச் சமயமேயாகும்; தொண்டின் நெறியேயாகும். .

பெரியபுராணத்தில் மக்கள் தொண்டு

சேக்கிழார் அருளித் தந்துள்ள பெரியபுராணத்தில் பேசப்பெற்றுள்ள அனைத்து அடியார்களும் சிவஞானிகள்; கடவுளைக் கண்டு காதலாகிக் கசிந்து வழிபட்டவர்கள்; அந்த ஆராஇன்பத்தில் திளைத்தவர்கள். அவர்கள் கடவுளைக் கண்டு - பரம்பொருளுடன் உறவுகொண்டு சிவானுபவத்தில் திளைத்து வாழ்ந்தாலும், வாழும் இந்த மனித சமுதாயத்தை மறக்கவில்லை, மறக்க எண்ணவில்லை. நீரும் நிலனும்போல மனித சமுதாயத்தின் இன்பத்துன்ப உணர்வோடு பின்னிக் கிடந்தார்கள். அவர்களுக்குத் தற்சார்பான விழைவு இல்லை - விருப்பமில்லை. ஆனாலும், சமுதாயத்தின் இருதயத் துடிப்புக்களை அவர்கள் எதிரொலித்தார்கள். .