பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள் 53


 திருஞானசம்பந்தர் ஞானத்தின் திருவுரு எம்பெருமானை விரலாற் சுட்டிக் காட்டும் பெருமை பெற்றவர்; ஞானப்பால் அருந்தியவர்; யாதொரு துன்பச் சுவடும் அறியாதவர். ஆனாலும், திருமருகல் திருத்தலத்தில் பெண்ணுரிமைக் கடமைக் கற்பொழுக்கால் வலியக் கூடி வந்த காதலனை இழந்து அல்லற்பட்ட செட்டிப் பெண்ணின் துன்பத்தை அப்படியே, இல்லை! ஒரு மாற்றுக் கூடுதலாகவே திருஞானசம்பந்தர் பிரதிபலிப்பது அவருடைய சமூக உணர்வுக்கோர் எடுத்துக்காட்டு. அப்பெண்ணின் கணவனை எழுப்பிக்கொடுத்து அவள் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்ட பின்புதான் திருக்கோயிலை நண்ணுகிறார் திருஞான சம்பந்தர்.

சுந்தரர், இறைவனாலேயே தடுத்தாட் கொள்ளப் பெற்றவர்; அழகுச் சொக்கனை அன்புத் தோழமையாகப் பெற்றவர். கூடியும் ஊடியும், ஏசியும் பேசியும் பெருமானோடு உறவுகொண்டவர். ஆயினும், இந்தச் சமுதாயத்தின் துன்ப உணர்ச்சிகளை ஏற்று, அவர் வருந்தியது போல யாரும் வருந்த வில்லை. ஆரூரர், அவிநாசிக்குச் செல்லுகிறார். ஆங்கு ஒரு வீட்டில் மங்கலஒலி கேட்கிறது! அதற்கு எதிர் வீட்டில் அழுகுரல் கேட்கிறது! அவிநாசிக்கு வந்த ஆரூரர், அவிநாசியப்பனைக் காணப்போகவில்லை. வாழ்வோருக்கே வாழ்த்துக் கூறும் இயல்பிற் சிக்கி மங்கலமுழக்கொலியுள்ள வீட்டுக்கும் போகவில்லை. தொழுதகைத் துன்பம் துடைப்பானின் தோழரல்லவா? அழுகுரல் கேட்ட வீட்டு முன்னேயே நின்றார். குலம் விளக்க வந்த விளக்கை-ஈன்று புறந்தந்த இனியமகனை, இழந்த பெற்றோர் வந்து வணங்கினர். அவர்தம் துன்பத்தைக் கண்டு நெஞ்சு நடுங்கினார்: அனலிடைப்பட்ட புழுவெனத் துடித்தார்; அவிநாசியப்பரை ஆற்றாமையோடு வேண்டினார்; மூவா முதல்வனை, முதலையுண்ட பாலனைத் தருமாறு முத்தமிழ் விரகர் பாடிப்பரவி வேண்டி நின்றார். பிறவாயாக்கைப் பெரியோன் கருணையால் பிள்ளையை மீட்டுப் பெற்றோரிடம்