பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கொடுத்து அவர்தம் மகிழ்வுகண்டு அவிநாசியப்பர் அடியிணை போற்றச் சென்றார். இத்தகு, நடமாடும் ஞானத் திருவுருவங்கள் மனித சமுதாயத்தின்பால் காட்டிய பரிவு, நம்மனோர் வாழ்க்கையில் வேண்டாமா? இந்தப் பரிவுணர்ச்சி நம்மிடம் இல்லாமையின் காரணமாகத்தான், நம்முடைய சமூகம் இன்று நிராதரவாக-அனாதையாகக் கிடக்கிறது. சமூகத்தை அணைத்து, அவர்களுடைய உணர்ச்சிகளைப் பிரதிபலித்து வளர்த்துப் பாதுகாக்காத சமயம் காலப் போக்கில் வரலாற்றிலேதான் இடம்பெறும்; வையகத்து வாழ்க்கையில் இடம்பெறுதல் அரிது! இதனை நம்முடைய தலைவர்கள் திருவுள்ளம் பற்றவேண்டும் என்பது நமது பிரார்த்தனை!

திருக்கோயில் வழிபாடு

சேக்கிழார் பெருமான், திருக்கோயில் வழிபாட்டில் ஈடுபாடுடையவர். அவரே முறையாகத் திருக்கோயில் வழிபாடு செய்யும் வழக்கமுடையவராக இருந்தார் என்பது, சேக்கிழார் புராணம் உணர்த்தும் உண்மை. திருநாகேச்சுரம் திருக்கோயிலில் முறையாக வழிபடும் வழக்கமுடைய சேக்கிழார், குன்றத்தூரிலும் அதுபோன்றதொரு திருக்கோயில் எடுப்பித்தார் என்று வரலாறு கூறுகிறது. திருஞான சம்பந்தரும், அப்பரடிகளும், மற்ற அடியார்களும் திருக்கோயிலில் வழிபட்ட முறைமையை உணர்ச்சி ததும்பச் சேக்கிழார் எடுத்துக் கூறுகின்ற முறை இப்பொழுது படித்தாலும் அந்தக் காட்சி நம் கண்முன்னே வருகிறது.

திருக்கோயில்களில் வழிவழித் தமிழினத்தைச் சேர்ந்த ஆதிசைவர்கள் நாள்வழி பாட்டைச் செய்யும் உரிமை பெற்றிருந்தனர். திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருமேனியில் எம்பெருமானைத் திருவோலக்கம் செய்தற்குரிய மூன்றுகால வழிபாட்டினை, ஆதிசைவர்களே செய்து வந்தனர். இதனைத் திருத்தொண்டத் தொகையும் உணர்த்துகிறது. சேக்கிழாரும் எடுத்து விளக்கியுள்ளார்.